மதுராந்தகம், தாராபுரத்தை விடுங்க... கடந்த 25 வருஷ இடைத்தேர்தல் முடிவுகள் எப்படியிருந்தது தெரியுமா?
கடந்த 25 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தல்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் சுமார் 58 சதவீத இடங்களில் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக, 1999 முதல் 2016 வரை நடைபெற்ற 34 இடைத்தேர்தல்களில் 32 இடங்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றதாகக் கூறப்படுகிறது.
ஆளுங்கட்சிக்கு சவாலான ஆர்.கே. நகர்:
2017-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்ட டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். ஆளுங்கட்சிக்கு எதிராக அமைந்த இந்தத் தேர்தல், தமிழக அரசியலில் முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஓவர்..! EVM மெஷின்களுக்கு சீல்..! பலத்த பாதுகாப்பு..!
திமுக, அதிமுக இடையே கடும் போட்டி:
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக 13 தொகுதிகளிலும், அதிமுக 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.
ஈரோடு கிழக்கு முதல் விக்கிரவாண்டி வரை:
2023-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்றார். 2024-ஆம் ஆண்டு விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அதே ஆண்டு விலவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
2025-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்றார். அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்திருந்தன.
மதுராந்தகம், தாராபுரத்தில் என்ன நடக்கும்?
முன்னதாக அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதையடுத்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
இரு தொகுதிகளிலும் தவெக சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ள இவர்கள் வெற்றி பெறுவார்களா அல்லது தமிழகத்தின் இடைத்தேர்தல் வரலாற்றில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருந்த போக்கு தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விறுவிறு இடைத் தேர்தல்..! ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்... வாக்குப்பதிவு நிலவரம்..!