டெல்லி தற்கொலைப்படை குண்டு வெடிப்பு! 12 நாள் பல்கலை.யில் பதுக்கப்பட்ட 2600 கிலோ வெடி மருந்து! என்.ஐ.ஏ பகீர்!
டெல்லி தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்துகளை, அல் பலாஹ் பல்கலைக்கு பின்புறம் உள்ள ஷெட்டில் 12 நாட்களாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்ஐஏ விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்தியத் தலைநகரில் நடந்த மிகக் கொடூரமான தற்கொலைப்படைத் தாக்குதலான நவம்பர் 10 பாஹர்கஞ்ச் குண்டுவெடிப்பு வழக்கில் தினமும் புதிய அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி நாட்டையே உலுக்கி வருகின்றன. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நடத்தி வரும் தீவிர விசாரணையில் இப்போது வெளியாகியுள்ள தகவல் மிகப் பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட சுமார் 2600 கிலோ அமோனியம் நைட்ரேட், அல்-பலாஹ் இஸ்லாமிய பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டிய மசூதியின் பின்புறத்தில் இருந்த ஒரு சிறிய ஷெட்டில் கிட்டத்தட்ட 12 நாட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்று என்ஐஏ கண்டுபிடித்துள்ளது.
மசூதியில் பழக்கமான ஒருவரிடம் “சின்னச் சின்ன பொருட்கள் வைத்துக் கொள்ளலாம்” என்று அனுமதி பெற்று, அந்த இடத்தில் இவ்வளவு பெரிய அளவிலான வெடிமருந்தை சதி கும்பல் பதுக்கியிருந்தது கொடூரத்தின் உச்சம் என்கின்றனர் அதிகாரிகள்.
இதையும் படிங்க: கனமழை எச்சரிக்கை... தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு... ஊரக திறனாய்வுத் தேர்வு தேதி மாற்றம்...
பின்னர் அப்பகுதியில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்ததும், தாக்குதலுக்கு ஒரே ஒரு நாள் முன்பு (நவம்பர் 9 இரவு) அந்த வெடிமருந்து முழுவதையும் பதேபுர் தாக்கா என்ற கிராமத்தில் உள்ள ஒரு மதகுருவின் வீட்டுக்கு அவசர அவசரமாக மாற்றியுள்ளனர். இதை ஒப்புக்கொண்ட அல்-பலாஹ் பல்கலை பேராசிரியர் முஷம்மில் அகமது கனாயும், அவருடன் தொடர்புடைய டாக்டர் ஷஹீன் ஷஹீத்தும் ஏற்கெனவே என்ஐஏவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணையில் மற்றொரு திடுக்கிடும் தகவலும் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதமே அல்-பலாஹ் பல்கலையில் இருந்து வெறும் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோரி ஜமால்பூர் கிராமத்தில் மூன்று அறைகள் கொண்ட ஒரு வீட்டை மாதம் 8000 ரூபாய் வாடகைக்கு எடுத்துள்ளார் கனாய். அந்த வீடு கிராம முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் ஜூம்மாவுக்கு சொந்தமானது.
“காஷ்மீரில் இருந்து பழங்கள் விற்பனைக்கு வரும், அதை இருப்பு வைக்கத்தான் வீடு வேண்டும்” என்று பொய் சொல்லி வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளார். அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்தவர் தான் கைது செய்யப்பட்ட டாக்டர் ஷஹீன். ஜூம்மாவிடம் “என் சொந்தக்காரர்” என்று அறிமுகப்படுத்தியவர், என்ஐஏ முன்பு “என் மனைவி” என்று ஒப்புக்கொண்டது மற்றொரு திருப்பம்.
ஜூம்மாவின் மருமகனுக்கு புற்றுநோய் சிகிச்சைக்காக அல்-பலாஹ் மருத்துவமனையில் அனுமதித்தபோதுதான், கனாயையும் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்திய உமர் நபியையும் ஜூம்மா முதல்முறையாக சந்தித்துள்ளார். தற்போது ஜூம்மாவிடமும் என்ஐஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
குண்டுவெடிப்புக்கு தேவையான ரசாயனங்கள் டெல்லி என்ஐடி நேரு மைதானம் அருகே உள்ள லால் பாபு என்பவரது உரிமம் பெற்ற ரசாயனக் கடையில் இருந்து வாங்கப்பட்டது உறுதியாகியுள்ளது. மருத்துவமனை ஆய்வகங்கள், கல்லூரிகளுக்கு மட்டுமே விற்பனை செய்ய அனுமதி உள்ள இந்தக் கடையில் இருந்து பெரிய அளவில் ரசாயனங்கள் வாங்கப்பட்டது தெரியவந்ததும், கடையின் அனைத்து ஆவணங்களையும் என்ஐஏ பறிமுதல் செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
அல்-பலாஹ் பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் என்ஐஏ-வின் சோதனை இப்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. 2600 கிலோ வெடிமருந்து ஒரு கல்வி நிறுவனத்துக்கு பின்புறம் மறைக்கப்பட்டிருந்தது என்ற உண்மை, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சுழன்று அடிக்கும் சூறைக்காற்று..!! தனுஷ்கோடிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு தடை..!!