உள்நாட்டு ஆயுத உற்பத்தியால் ₹2.64 லட்சம் கோடி சேமிப்பு: டிஆர்டிஓ-வை பாராட்டி தள்ளிய மத்திய அரசு!
உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஆராய்ச்சிகளால் கடந்த 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு (டிஆர்டிஓ) மத்திய அரசு பாராட்டு தெரிவித்துள்ளது.
புது டெல்லி: இந்தியாவை பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்றியதற்கு முக்கிய காரணமாக விளங்கும் தேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 2 லட்சத்து 64 ஆயிரத்து 156 கோடி ரூபாயை நாட்டுக்கு சேமித்துக் கொடுத்துள்ளது என்று பார்லிமென்ட்டின் பாதுகாப்புத் துறை நிலைக்குழு அறிக்கையில் பெருமிதமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள், ஏவுகணைகள், ராடார்கள், போர் விமானங்கள் வாங்குவதற்கு செலவிட்ட பல்லாயிரம் கோடி ரூபாய்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலம் தடுத்து நிறுத்தியதே இந்தப் பெரும் சேமிப்புக்கு காரணம் என்று அறிக்கை விளக்குகிறது.
குறிப்பாக, 2024 நவம்பர் மாதம் ஒடிசா கடற்கரையில் இருந்து வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நீண்ட தூர ஹைபர்சோனிக் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த ஏவுகணை ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பறந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரத்தில் உள்ள எதிரி கப்பல்களை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது.
இதையும் படிங்க: பாக்., சீனா வயிற்றில் புளியை கரைக்கும் இந்தியா! களமிறங்கும் அசூரன்! 2 இன்ஜின்!! மணிக்கு 2,500 கி.மீ வேகம்!!
அதேபோல், அக்னி தொடர் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்பட்ட புதிய தொழில்நுட்பம் மூலம் ஒரே ஏவுகணை பல இலக்குகளை தாக்கிவிட்டு, மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வர முடியும் என்பதை டிஆர்டிஓ நிரூபித்தது. இது உலகிலேயே மிகச் சில நாடுகளுக்கு மட்டுமே உள்ள அதிநவீன தொழில்நுட்பமாகும்.
பிரமோஸ் ஏவுகணை, தேஜஸ் போர் விமானம், அர்ஜுன் டேங்க், பினாக்கா ராக்கெட் லாஞ்சர், ஆகாஷ் ஏர் டிஃபென்ஸ் சிஸ்டம், நாக் எதிர் டேங்க் ஏவுகணை, வருணாஸ்திரா டார்பிடோ என டிஆர்டிஓ உருவாக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படையில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.
இவை அனைத்தும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டதால், வெளிநாட்டு ஆயுத நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணம் மிச்சமானது மட்டுமல்ல, இந்திய தொழில்களுக்கும் வேலைவாய்ப்பு பெருகியது, நாட்டின் பாதுகாப்பும் வலுவடைந்தது.
பார்லிமென்ட் நிலைக்குழு அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “ஹைபர்சோனிக் தொழில்நுட்பம், ஸ்டெல்த் போர் விமானங்கள், செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் என அடுத்த தலைமுறை போர்த் தொழில்நுட்பங்களில் இந்தியா முன்னேறி வருகிறது. இதற்கு டிஆர்டிஓ-வின் பங்களிப்பு மகத்தானது. இந்தப் பயணம் தொடரும் என்று நம்பிக்கை உள்ளது.”
இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பாதுகாப்பு ஆயுத ஏற்றுமதி நாடாக மாற்றும் இலக்கை நோக்கி மோடி அரசு வேகமாக சென்று கொண்டிருப்பதற்கு டிஆர்டிஓ-வின் சாதனைகளே மிகப்பெரிய எடுத்துக்காட்டு என்று பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: பாகிஸ்தானை பொளந்து கட்டிய அரக்கன்!! கெத்து காட்டிய பிரம்மோஸ் ஏவுகணைக்கு கூடுது மவுசு!