கேபிள் கார் கோளாறு! அந்தரத்தில் தவித்த 300 பேர்! களமிறங்கிய காப்பாற்றிய வீரர்கள்!
ஜம்மு - காஷ்மீர் குல்மார்க்கில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, 'கேபிள் கார்' சேவை திடீரென நின்றதை அடுத்து, 300க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் அந்தரத்தில் தவித்தனர்.
குல்மார்க்: ஜம்மு-காஷ்மீரின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான குல்மார்க்கில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேபிள் கார் சேவை திடீரென நின்றுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடல் மட்டத்தில் இருந்து 8,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பிரதேசம், ஆண்டு முழுவதும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
இங்குள்ள கோண்டோலா கேபிள் கார் உலகின் இரண்டாவது உயரமான மற்றும் ஆசியாவின் நீளமான கேபிள் சவாரியாகும். 5 கிலோமீட்டர் தூரத்தைத் தாண்டி 8,500 முதல் 14,000 அடி உயரம் வரை பயணிக்கும் இந்த சேவை, மலைத்தொடரின் அழகை ரசிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த வாய்ப்பைத் தருகிறது.
நேற்று மாலை பலர் கேபிள் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் 65 கேபிள் கார் பெட்டிகள் ஆங்காங்கே அந்தரத்தில் நின்றன. பெண்கள், குழந்தைகள் உள்பட 300க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பயங்கர பீதியில் சிக்கினர்.
இதையும் படிங்க: குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாஜக அமோகம்! 11 மாநகராட்சியில் முன்னிலை பெற்று அசத்தல்!
சிலர் அலறியும், தங்களைக் காப்பாற்றும்படி கூக்குரலிட்டும் பெரும் அச்சத்துக்கு உள்ளானார்கள். குளிர் மற்றும் உயரம் காரணமாக நிலைமை மேலும் மோசமடையும் அபாயம் இருந்தது.
சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF), மாநில பேரிடர் மீட்புப் படை, ஜம்மு-காஷ்மீர் போலீசார் மற்றும் இந்திய ராணுவ வீரர்கள் கூட்டு முயற்சியில் மீட்புப் பணியைத் தொடங்கினர்.
கயிறு ஏணிகள் மற்றும் தேவையான உபகரணங்களைப் பயன்படுத்தி ஒவ்வொரு கேபிள் கார் பெட்டியாக அணுகி, அனைத்து பயணிகளையும் பத்திரமாக மீட்டனர். மீட்பு நடவடிக்கை சுமூகமாக முடிவடைந்ததால் பயணிகள் அனைவரும் உடல்நலத்துடன் மீட்கப்பட்டனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த துணிச்சலான மீட்பு நடவடிக்கையைப் பாராட்டினார். தனது சமூக ஊடகப் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “குல்மார்க்கில் கேபிள் கார்களில் சிக்கிய 300 சுற்றுலாப் பயணிகளை மீட்புப் படையினர் வெற்றிகரமாக மீட்டுள்ளனர்.
இந்திய ராணுவம், ஜம்மு-காஷ்மீர் போலீசார், NDRF மற்றும் SDRF ஆகிய அனைத்துத் தரப்பினரின் ஒருங்கிணைந்த முயற்சியும் திறமையும் பாராட்டுக்குரியது. இந்த மீட்புப் பணியில் ஈடுபட்ட அனைத்து வீரர்களின் அர்ப்பணிப்பையும் தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குல்மார்க் கேபிள் கார் சேவையின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கவனம் செலுத்த வைத்துள்ளது. அதிகாரிகள் தொழில்நுட்பப் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எகிறும் எபோலா பாதிப்பு! கட்டுக்கடங்காமல் பரவுவதால் அதிர்ச்சி! 10 ஆப்ரிக்க நாடுகளுக்கு பறந்தது அலர்ட்!