×
 

வரும் 15ம் தேதி வரை 32 விமான நிலையங்கள் மூடல்.. எங்கெல்லாம் விமான சேவை பாதிக்கும் தெரியுமா?

இந்தியாவில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் 32 விமான நிலையங்களை வரும் 15ம் தேதி வரை மூடுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கிந்திய மாநிலங்களில் உள்ள 32 விமான நிலையங்களில் அடுத்த 5 நாட்களுக்கு எந்தவிதமான சிவில் விமானப் போக்குவரத்துக்கும் தடைவிதித்து இந்திய விமான ஆணையம் அறிவித்துள்ளது.

இதன்படி 32 விமானநிலையங்களும் மே9ம்தேதி முதல் மே 14ம் தேதிவரை, மே 15ம் தேதி அதிகாலை 5.49 வரை மூடப்படும், விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: மக்களுக்கு குறி வைக்கும் பாக்., நன்றி மறந்த துருக்கியுடன் நயவஞ்சக கூட்டணி.. அமிர்தசரஸில் ரெட் அலர்ட்..!

டெல்லி மற்றும் மும்பைக்கு இடையே மட்டும் 25 விமானத் தடங்களும், பாகிஸ்தானுக்கு அருகே இருக்கும் விமானத் தடங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, லேஹ், தோய்ஸ், ஜம்மு, ஸ்ரீநகர், அவந்திபோரா, ஆதம்பூர், அமிர்தசரஸ், பத்திண்டா, ஹல்வாரா, லூதியானா, பாட்டியாலா, பதான்கோட், அம்பாலா, ஷிம்லா, குளு,காக்கல், சண்டிகர், பிகானிர், ஜெய்சல்மார், கிஷான்கார்க், உத்தர்லேய், பூஜ், ஜாம்நகர், காண்ட்லா, கேஷ்ஹோட், முந்த்ரா, போர்பந்தர், ராஜ்கோட், நலியா, ஹிண்டன், ஷஹரான்பூர் விமான நிலையங்களில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8ம்தேதி இரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் பல்வேறு நகரங்களையும் சிவில் விமான தளங்களையும் குறிவைத்து தாக்கியதால்தான் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜம்மு, ஸ்ரீநகர், லேஹ், ஜோத்பூர், அமிர்சரஸ்,சண்டிகர், பூஜ், ஜாம்நகர், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு மே 15ம் தேதிவரை ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தால், அதை கேன்சல் செய்யும்போது முழுமையாக கட்டணம் திருப்பி வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இன்டிகோ விமான நிறுவனம் ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்சரஸ், லேஹ், சண்டிகர், தரம்சாலா, பிகானிர், ஜோத்பூர், கிஷான்கார்க், ராஜ்கோட் ஆகிய நகரங்களுக்கு விமான சேவையை ரத்து செய்துள்ளது, மே 8ம் தேதிக்கு முன் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் மட்டும் கட்டணத்தை முழுமையாக திரும்பப் பெற தகுதியானவர்கள் எனத் தெரிவித்துள்ளது. டெல்லி விமானநிலையத்திலிருந்து 138 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. 

டெல்லி விமான ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் “வான்வெளித்தடங்கள் மாற்றம், பாதுகாப்பு சிக்கல், போர் பதற்றம் ஆகியவை காரணமாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் தொடர்ந்து விமானநிலைய அப்டேட்களை பார்த்து, விமான சேவையை பயன்படுத்தவும். பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் உடைமைகளை பரிசோதிக்க கூடுதல் நேரம் ஆகலாம் என்பதால் ஒத்துழைக்கவும், விமானம் புறப்படுவதற்கு 3 மணிநேரத்துக்கு முன்பாகவே பயணிகள் வந்து தங்கள் உடைமைகளை பரிசோதித்துக் கொள்ளவும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். விமானம் புறப்படும் 75 நிமிடங்களுக்கு முன்பாகவே செக்இன் முடிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: ராணுவ தளபதிக்கு கூடுதல் பவர்.. இனி ஒருத்தன் வாலாட்டக்கூடாது! ஆப்ரேஷன் சிந்தூர் 2.0 அதிரடி அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share