பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்! வரவேற்பில் படைக்கப்போகும் புதிய சாதனை!!
பிரதமர் மோடி வரவேற்பின் போது 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றாக 5 நிமிடங்கள் நடனம் ஆடி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்க முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்ரவரி 7, 2026) மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிமின் அழைப்பின் பேரில் நடைபெறும் இந்தப் பயணம், அவருடைய மூன்றாவது மலேசியா வருகையாகும். 10 ஆண்டுகளுக்குப் பிறகு மோடி மீண்டும் மலேசியாவுக்கு வருவது இந்திய சமூகத்தினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், மோடி மலேசிய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார். வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மறுஆய்வு செய்ய இருக்கின்றனர். 10வது இந்தியா-மலேசியா தலைமை செயல் அதிகாரிகள் கூட்டமும் நடைபெறவுள்ளது. இந்திய சமூக உறுப்பினர்கள் மற்றும் தொழில் வணிக பிரதிநிதிகளுடனும் சந்திப்பு நிகழும்.
இந்தப் பயணத்தின் சிறப்பம்சமாக, இந்திய வம்சாவளி கலைஞர்கள் பெரும் கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். சுமார் 800 கலைஞர்கள் ஒரே மேடையில் ஒன்றிணைந்து 5 நிமிடங்கள் தொடர்ச்சியான நடனத்தை ஆடி, மலேசிய சாதனை புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பிடிக்க முயற்சி செய்கின்றனர்.
இதையும் படிங்க: திமுக தென்மண்டல இளைஞர் அணி மாநாடு!! அசத்தல் தேர்தல் அறிவிப்புகள் வெளியாகும்? எதிர்பார்ப்பு!
இந்த நிகழ்ச்சி 'Selamat Datang Modiji' என்ற வரவேற்பு நிகழ்வில் மாலை நடைபெறும். MINES International Exhibition & Convention Centre-இல் நடக்கும் இந்த நடனம், பாரதநாட்டியம், கதக், ஒடிசி உள்ளிட்ட இந்திய கிளாசிக்கல் மற்றும் நாட்டுப்புற நடன வகைகளை இணைத்து ஒரே கோரியோகிராஃபியில் வழங்கப்படும்.
பிரதமர் மோடி மற்றும் மலேசிய பிரதமர் முன்னிலையில் நடைபெறும் இந்த சாதனை முயற்சி, வெளிநாட்டில் இந்திய பாரம்பரியத்தை பிரகாசமாக வெளிப்படுத்தும். இந்திய வம்சாவளியினரின் ஒற்றுமை, கலாச்சார பெருமையை உலகிற்கு காட்டும் வகையில் அமையும். பல வாரங்களாக பயிற்சி செய்து வரும் கலைஞர்கள், இதை மாபெரும் வெற்றியாக்க தயாராக உள்ளனர். இந்த நிகழ்வு இந்தியா-மலேசியா உறவுகளை கலாச்சார ரீதியாகவும் வலுப்படுத்தும்.
இந்திய சமூகத்தினரின் ஆர்வத்துடன் நடைபெறும் இந்த சாதனை முயற்சி, சமூக வலைதளங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடியின் வருகை மலேசியாவில் உள்ள இந்தியர்களின் பெருமையை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சசிகலாவை சந்தித்த நிர்வாகி நீக்கம்! டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கை!