கன்னட நடிகர் தர்ஷன் கைது… ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் கர்நாடகா போலீஸ் அதிரடி நடவடிக்கை!
ரசிகரை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
கர்நாடகாவின் சித்ரதுர்காவைச் சேர்ந்த 33 வயது இளைஞரான ரேணுகாசாமி, தனியார் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தவர். இவருக்கு கடந்த 2023ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ரேணுகாசாமி, நடிகர் தர்ஷனின் தீவிர ரசிகராக இருந்தவர்.
ஆனால், தர்ஷனின் நெருங்கிய தோழியும், கன்னட நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச குறுஞ்செய்திகள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தச் சம்பவம், தர்ஷனுக்கு தெரியவந்ததும், அவர் கடும் கோபமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ரேணுகாசாமியை கடத்தி, கொடூரமாகத் தாக்கி, கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பெங்களூருவின் காமக்ஷிபாளையா பகுதியில் உள்ள ஒரு கொட்டகையில் ரேணுகாசாமி அடைத்து வைக்கப்பட்டு, தர்ஷனின் உதவியாளர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டார். தர்ஷன் நேரடியாக அங்கு வந்து, ரேணுகாசாமியை பெல்ட்டால், மரக்கட்டையால், மற்றும் கையால் அடித்து சித்ரவதை செய்ததாக வாக்குமூலத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ரசிகரை கொன்ற வழக்கு! கன்னட நடிகர் தர்ஷன் ஜாமீன் ரத்து.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
மேலும், பவித்ரா கவுடாவை தனது காலணியால் ரேணுகாசாமியை அடிக்குமாறு தர்ஷன் உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட மொத்தம் 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இதில், நடிகர் தர்ஷன் உள்ளிட்ட ஏழு பேருக்கு கர்நாடகா நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட தர்ஷனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி இருந்தது. இந்த ஜாமினை எதிர்த்து கர்நாடகா காவல்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தின் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை எடுத்து ரேணுகா சாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கௌடா உள்ளிட்ட ஏழு பேருக்கு வழங்கப்பட்ட ஜாமினை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியவை ரத்து செய்துள்ளதால் மீண்டும் கன்னட நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: திமுக ஒடுக்குமுறை மானக்கேடு முதல்வரே! இது பாசிச வெறியாட்டம்.. சீமான் கொந்தளிப்பு..!