வெளிநாட்டுக்கு போகக்கூடாது! நடிகர் சவுபின் ஷாகிருக்கு அதிரடி உத்தரவு போட்ட குற்றவியல் நீதிமன்றம்
பண மோசடி வழக்கு நிலுவையில் இருப்பதால் நடிகர் சௌபின் ஷாகிர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
சவுபின் ஷாகிர், மலையாளத் திரையுலகில் தனது தனித்துவமான நடிப்பு மற்றும் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருபவர். 2003-ஆம் ஆண்டு உதவி இயக்குநராகத் தனது திரைப் பயணத்தைத் தொடங்கிய இவர், பிரேமம் திரைப்படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்து பிரபலமானார். சூடானி பிரம் நைஜீரியா படத்தில் நடித்ததற்காக கேரள மாநில திரைப்பட விருதைப் பெற்றவர். இவர் தயாரித்த மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் வணிக ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால், இந்தப் படத்தின் தயாரிப்பு தொடர்பாக எழுந்த பண மோசடி குற்றச்சாட்டு, அவரது புகழுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சிராஜ் வலியவீட்டில் ஹமீத் என்பவர், படத்தைத் தயாரிக்க சவுபின் ஷாகிரிடம் சுமார் 7 கோடி ரூபாயை முதலீடாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. இந்த முதலீட்டிற்கு பதிலாக, படத்தின் லாபத்தில் 40% பங்கு வழங்கப்படும் என சவுபின் உறுதியளித்ததாக சிராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய பிறகும், சவுபின் ஷாகிர் அந்த 40% லாபத்தையோ அல்லது முதலீட்டுத் தொகையையோ திருப்பிக் கொடுக்கவில்லை என சிராஜ் புகார் அளித்தார். இந்த வழக்கு கேரள உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
போலீசார் அளித்த அறிக்கையில், சவுபின் ஷாகிர் உள்ளிட்ட மூவரும் பண மோசடியில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனை அடுத்து, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மூவரும் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால், அவர்களது மனு நிராகரிக்கப்பட்டு, விசாரணையைத் தீவிரப்படுத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதையும் படிங்க: கேரளாவை ஆட்டிப்படைக்கும் அமீபா தொற்று.. தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்துவது என்ன..??
இந்த நிலையில், நடிகர் சவுபின் ஷாகிர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் நடைபெறும் விழாவில் பங்கேற்க சவுபின் ஷாகிர் திட்டமிட்டிருந்த நிலையில் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. படம் தொடர்பான பண மோசடி வழக்கில் எர்ணாகுளம் குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: ஆக்ரோஷமான கோவில் யானை.. பாகன் உயிரிழந்த பரிதாபம்.. கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்..!!