ஐடி ஊழியர் கடத்தல் வழக்கு! நடிகை லட்சுமிமேனன் நண்பர்களை காவலில் எடுக்க திட்டம்..!
ஐடி ஊழியரை கடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை லட்சுமிமேனனின் நண்பர்கள் மூன்று பேரை காவலில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
நடிகை லட்சுமி மேனன், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர். 2011ஆம் ஆண்டு மலையாள திரைப்படமான ரகுவிண்டெ சுவந்தம் ரசியா மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், தமிழில் சுந்தர பாண்டியன், கும்கி, கொம்பன், றெக்க உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நடித்து பிரபலமானார். இருப்பினும், சமீப காலமாக அவர் பெரிய அளவில் திரைப்படங்களில் நடிக்கவில்லை. தற்போது, யோகி பாபுவுடன் மலை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே, கேரளாவின் கொச்சியில் உள்ள பானர்ஜி சாலையில் அமைந்துள்ள வெலாசிட்டி என்ற சொகுசு மதுபான விடுதிக்கு லட்சுமி மேனன் தனது நண்பர்களுடன் சென்றிருந்தார். அங்கு, அவரது நண்பர்களுக்கும், மற்றொரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் பெரும் தகராறாக மாறியது. மேலும் இரு தரப்பினரும் பாரை விட்டு வெளியேறினர்.
ஆனால், பிரச்சினை அங்கு முடிவடையவில்லை. வெளியே சென்ற பிறகு, லட்சுமி மேனனின் நண்பர்கள், ஆலுவாவைச் சேர்ந்த அலியார் ஷா சலீம் என்ற ஐடி ஊழியரை காரில் கடத்தியதாகவும், அவரை தாக்கியதாகவும் புகார் எழுந்தது. அலியார் ஷா சலீம் தனது புகாரில், தன்னை கடத்திய காரில் லட்சுமி மேனன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் இருந்ததாக குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மிதுன், அனீஷ் மற்றும் சோனாமோல் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கைகள் சிசிடிவி காட்சிகள் மற்றும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: முதல்வர் நாற்காலியில் விஜய்... தவெகவினரின் விநாயகர் சிலை வைரல்
வீடியோவில், லட்சுமி மேனன் மற்றும் அவரது நண்பர்கள் ஒரு காரை வழிமறித்து, அதில் இருந்தவர்களுடன் தகராறில் ஈடுபட்டு, பின்னர் ஐடி ஊழியரை கடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் லட்சுமி மேனனின் பெயரும் முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கப்பட்டது. காவல்துறையினர் அவரை விசாரணைக்கு அழைக்க முயன்றபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, லட்சுமி மேனன் கேரள உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.
அவரது தரப்பில், தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் உள்நோக்கம் கொண்டவை என்றும், இந்த புகார் தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அளிக்கப்பட்டது என்றும் வாதிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், செப்டம்பர் 17, 2025 வரை லட்சுமி மேனனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த நிலையில், நடிகை லட்சுமி மேனனின் நண்பர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க கேரள போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: இதுதாங்க நம்ப தமிழ்நாடு... விநாயகர் ஊர்வலத்தில் கூட்டம், கூட்டமாக பங்கேற்ற இஸ்லாமியர்கள்...!