பேசுற நிலையில இல்ல...கரூர் சம்பவத்திற்கு பின் ஆதவ் அர்ஜுனா முதல்முறையாக பேட்டி...!
கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் முறையாக ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜயின் கரூர் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
கரூரில் உள்ள வேலுசாமிபுரத்தில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விஜயை நேரில் காண வந்தனர். போலீஸ் அனுமதி மனுவில் 10 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என்று குறிப்பிட்டிருந்த போதிலும், உண்மையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் திரண்டனர், விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததால், வெயில் வாட்டும் பகலில் காத்திருந்த மக்கள் சோர்வடைந்தனர். குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகம் இருந்ததால், 9 வயது சிறுமி ஒருவர் காணாமல் போனதாக வந்த தகவல் கூட்டத்தை இன்னும் குழப்பமானதாக்கியது. மேலும், அந்த இடத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் யாரும் இந்த கோரச் சம்பவம் குறித்து எதுவும் பேசாத நிலையில், ஆதவ் அர்ஜுனா நேற்றைய தினம் மௌனம் கலைத்தார். என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை கடந்த 24 மணி நேரமாக அனுபவித்து வருவதாகவும் இந்த மரணங்கள் நெஞ்சை இன்னும் உலுக்கிக் கொண்டு இருப்பதாகவும் மரணத்தின் வலியையும் அந்த மக்களின் அழுகுரலையும் கடந்து செல்ல வழியின்றி தவித்து வருவதாகவும் கூறி இருந்தார்.
இதையும் படிங்க: என் தாயின் மரண வலி மீண்டும் என் மீது பாய்ந்தது... மவுனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா...!
ஒரு மரணத்தின் வலியை ஐந்து வயது சிறுவனாக எனது தாயின் தற்கொலையில் பார்த்தபோதே உணர்ந்தவன் எனவும் அந்த வலியை இப்போது எனக்கு மீண்டும் ஏற்படுத்தியுள்ளது இந்த மரணங்கள் எனவும் தெரிவித்தார். இந்த நிமிடம் வரை இந்த துயர நிகழ்வைக் கடந்து செல்ல முடியாமலும், உறவுகளை இழந்து தவிக்கின்ற அந்த குடும்பங்களின் தவிப்புமே என்னை மீளாத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறினார்.
இந்த நிலையில் கரூர் சம்பவம் நிகழ்ந்த பிறகு முதல்முறையாக ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களை சந்தித்தார். பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்போம் என்றும் மக்களுடனான மிகப்பெரிய பயணம் தொடரும் எனவும் ஆதவ் அர்ஜுனா கூறினார். என் தாயை இழந்ததை விட அதிக வேதனையில் உள்ளேன் என்றும் எதுவும் பேசும் மனநிலையில் இல்லை, தனிமையில் விடுங்கள் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கும் வேதனை இருக்கும்… அவருக்கு என்ன பிரச்சனையோ! ஆதரவாக பேசிய சனம் செட்டி…!