×
 

தமிழகம் வரும் பிரதமர் மோடி... ஏற்பாடுகள் மும்முரம்..! அதிமுக நிர்வாகிகள் தீவிர ஆலோசனை..!!

பிரதமர் மோடி மார்ச் ஒன்றாம் தேதி தமிழக வரும் நிலையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பிரதமர் நரேந்திர மோடி வரும் மார்ச் 1-ஆம் தேதி தமிழகத்துக்கு, குறிப்பாக மதுரைக்கு வருகை தரவிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருகை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்திருப்பதால், அதிமுக இன்று நிர்வாகிகள் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அளவிலான பொறுப்பாளர்கள் பங்கேற்றதாக கூறப்பட்டுள்ளது.

பிரதமரின் மதுரை பயணம் மற்றும் அங்கு நடைபெறவுள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை முன்னிட்டு, அதிமுக சார்பில் எடுக்க வேண்டிய ஏற்பாடுகள், தொண்டர்களை திரட்டுவது, கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்பது போன்றவை மையப் பேசுபொருளாக இருந்தன. குறிப்பாக, மார்ச் 1 அன்று மதுரையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் என்.டி.ஏ. கூட்டணியின் அனைத்து கட்சித் தலைவர்களும் மேடையில் இணைந்து இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதிமுகவின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது.

கூட்டணியில் தற்போது உள்ள பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ள நிலையில், அந்த இணைப்புகளை வலுப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. பிரதமரின் உரைக்கு முன்பாகவே கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் தொண்டர்களை பெருமளவில் திரட்ட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும், மார்ச் மாதத்தில் மோடி ஒரே மாதத்தில் மூன்று முறை தமிழகம் வருவார் என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க: “அந்தம்மா மாநாடு நடத்தும் போது அப்படி கேட்டாங்க... அந்த கூட்டணி வெளங்குமா?” - பிரேமலதா விஜயகாந்தை விளாசிய இபிஎஸ்...!!

மார்ச் 1-ல் மதுரை, 6-ல் வேலூர், 11-ல் திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதிகளில் பிரசாரம் செய்கிறார். இதனால் அதிமுக நிர்வாகிகள் தங்கள் மாவட்ட அளவிலான தயாரிப்புகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக மதுரை பகுதியில் தொண்டர்களை ஒருங்கிணைப்பது, பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு, பிரசாரப் பொருட்கள் தயாரிப்பு ஆகியவை குறித்து விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: தீவிரவாதிகளின் புகலிடமா தமிழகம்? பயமா இருக்கு..!! எஸ். பி. வேலுமணி ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share