அதிமுக கோட்டையில் அவமானப்பட்ட எடப்பாடி... அதுவும் மோடி முன்னாடி... அதிருப்தியை அப்பட்டமாக காட்டிய ர.ர.க்கள்...!
அதிமுக கொடிகள், தொண்டர்கள் எங்கும் இல்லாதது கட்சி தலைமையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாகர்கோவிலில் ரோடு சோ நடத்திய பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு: அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் தங்களது பிரச்சாரத்தை தீவிரப் படுத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு ஆகிய 6 தொகுதிகளில் ஒன்றில் மட்டும் அதிமுகவும், 4 தொகுதிகளில் பாஜகவும் ஒரு தொகுதியில் தமாகாவும் போட்டியிடுகிறது.
இதையும் படிங்க: களைகட்டிய கன்னியாகுமரி..! NDA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ரோடு ஷோ..!!
இதனால் கன்னியாகுமரியில் அதிமுகவினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதிமுக வேட்பாளரான தளவாய் சுந்தரத்தை கன்னியாகுமரி மண்ணில் தோற்கடித்தே தீருவோம் என கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக மேற்கண்ட தொகுதிகளில் உழைத்த அதிமுக மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், தங்களுக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், கூட்டணித் தர்மத்திற்காகத் தொகுதியை விட்டுக் கொடுத்தது அவர்களின் அரசியல் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
அதில் அதிமுகவின் கோட்டையான நாகர்கோவில் தொகுதியும் அடங்கும். நாகர்கோவில் தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக மகளிர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று மதியம் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி நாகர்கோவில் மறவன் குடியிருப்பு ஆயுதப்படை மைதானத்திற்கு ஹெலிகாப்டர் மூலமாக வந்த இறங்கினார்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக நாகர்கோவில் வேப்பமூடு ஜங்ஷன் பகுதிக்கு பிரதமர் மோடி வந்தார். அங்குள்ள காமராஜர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து வேப்பமூடு ஜங்ஷன் வழியாக அண்ணா ஸ்டேடியம் வடசேரி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை மார்க்கமாக பிரச்சார வாகனத்தில் நின்றபடி ரோடு ஷோ நடத்தினார்.
பிரதமர் மோடியின் இடதுபுறத்தில் கூட்டணி கட்சி தலைவர் ஆன எடப்பாடி பழனிச்சாமி, வலது புறத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரச்சார வாகனத்தில் இருந்தனர். வழிநெடுகிலும் இருந்த அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட பெரும் தலைவர்களின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் ரோடு ஷோ நடத்தப்பட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு இருபுறமும் சாலைகளில் பொதுமக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பூக்களை தூவினர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பிரதமர் மோடி இரு கைகளையும் தூக்கி தொண்டர்களுக்கு கையசைத்தார்.
அதைப் பார்த்த தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்து மோடி மோடி பாரத் மாதா கி ஜே என்ற முழக்கங்களை கோசமாக சத்தமிட்டனர். பின்னர் வடசேரி ஜங்ஷன் பகுதிகளில் ரோடு ஷோவை முடித்து மீண்டும் பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு சென்றார்.
இந்த ரோடு ஷோ நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் முழுவதுமே பலத்த பாதுகாப்பு காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. அதிமுக கூட்டணி கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடி அருகில் நின்று கொண்ட போதிலும் நாகர்கோவிலில் ரோடு ஷோ நடத்தும் பகுதிகளில் அதிமுக கொடிகளோ நிர்வாகிகளோ யாரும் இல்லாத சூழ்நிலை இருந்தது.
இதையும் படிங்க: தருமபுரி பெண்களின் முன்னேற்றத்திற்கு அடித்தளம் போட்ட மண்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!