Deepfake-க்கு செக்! இனி 36 மணி நேரம் இல்லை... வெறும் 3 மணி நேரம் மட்டும் தான்! ஏஐ போலி பதிவுகளுக்கு மரண அடி!
சட்டவிரோதமான மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கப்பட்ட போலியான தகவல்களை சமூக வலைத்தளங்கள் 3 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும் என மத்திய அரசு புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளைத் திருத்தி கடுமையாக்கியுள்ளது.
சமூக வலைத்தளங்களில் பரவும் சட்டவிரோதமான மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்படும் போலியான பதிவுகளுக்கு எதிராக மத்திய அரசு கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி, சட்டவிரோதமான ஏஐ பதிவுகள் குறித்து புகார் வந்தால், அவற்றை சமூக வலைத்தள நிறுவனங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன்படி, இதற்கு முன்பு வழங்கப்பட்ட 36 மணி நேர அவகாசம் தற்போது வெறும் 3 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் உண்மையானது போன்று தோற்றமளிக்கும் போலி புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக டீப்பேக் தொழில்நுட்பம் மூலம் பிரபலங்கள் மற்றும் பொதுமக்களின் முகம் அல்லது குரலைப் பயன்படுத்தி போலியான உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: AI-ஐ கற்றுக்கொள்ளுங்கள்! தொழில் தொடங்க இது சரியான நேரம்... இளைஞர்களுக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்!
ஆள்மாறாட்டம் செய்யும் வகையிலான டீப்பேக் பதிவுகள், சம்பந்தப்பட்ட நபரின் அனுமதியின்றி பகிரப்படும் ஆபாச உள்ளடக்கங்கள், குழந்தைகள் தொடர்பான பாலியல் ரீதியான உள்ளடக்கங்கள் உள்ளிட்ட சட்டவிரோத பதிவுகளை தடுப்பதே புதிய விதிகளின் முக்கிய நோக்கமாகும்.
திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-ன் கீழ் செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது மாற்றியமைக்கப்பட்ட உள்ளடக்கங்களை பயனர்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில் உரிய குறியீடுகள் அல்லது அடையாளங்களை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு வீடியோ அல்லது படம் உண்மையானதா, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை பயனர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும், சட்டவிரோதமான ஏஐ உள்ளடக்கங்களை உருவாக்குவது, பதிவேற்றுவது அல்லது பகிர்வது தொடர்பான சட்டரீதியான விளைவுகள் குறித்தும் சமூக வலைத்தள நிறுவனங்கள் தங்கள் பயனர்களுக்கு தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
இந்த விதிகள் குறித்து மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், போலி தகவல்கள் மற்றும் டீப்பேக் உள்ளடக்கங்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.
எனினும், “சட்டவிரோதமானது” என்பதை எவ்வாறு தீர்மானிப்பது, தவறான புகார்களால் உண்மையான பதிவுகள் அகற்றப்படுமா, மேலும் 3 மணி நேரத்திற்குள் கோடிக்கணக்கான பதிவுகளை கண்காணிப்பது சமூக வலைத்தளங்களுக்கு நடைமுறையில் சாத்தியமா என்ற கேள்விகளும் எழுகின்றன. குறிப்பாக ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கம் உண்மையா, போலியா என்பதை உடனடியாகத் தீர்மானிப்பது தொழில்நுட்ப ரீதியாகவும் சவாலாக இருக்கலாம்.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்படும் போலி உள்ளடக்கங்களுக்கு எதிரான கண்காணிப்பை மத்திய அரசு மேலும் கடுமையாக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அடையாளம் தெரியாத நபரால் தொடரும் தொல்லை! சென்னை மேயர் பிரியா புகரால் பரபரப்பு!