×
 
☰

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் எதிரொலி! சவுதி செல்லும் ஏர் இந்தியா விமானங்கள் திடீர் ரத்து!

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதல் எதிரொலியாக சவுதி அரேபியாவிற்கு செல்லும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் அக் 17 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய இலக்குகளைக் குறிவைத்து நடத்தி வரும் தீவிர ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, சவுதி அரேபியாவிற்கான தனது அனைத்து விமானச் சேவைகளையும் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்வதாக இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமான ஏர் இந்தியா (Air India) அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரப் போர்ச் சூழல் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சவுதி அரேபியாவில் தற்போது நிலவி வரும் அசாதாரணப் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டும், பயணிகளின் பாதுகாப்பிற்கு முதலிடம் அளிக்கும் வகையிலும், சவுதி அரேபியாவின் ரியாத், தம்மாம் மற்றும் ஜெட்டா ஆகிய முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களும் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ரியாத் மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, அங்கு விமானப் போக்குவரத்து ஏற்கனவே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்தான் பாதுகாப்பு எச்சரிக்கைகளை ஏற்று இந்திய விமான நிறுவனங்கள் தங்களது சேவைகளை முடக்கியுள்ளன.

இதையும் படிங்க: சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்கள் ரத்து.... தெற்கு ரயில்வே அறிவிப்பு!

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு மாற்று வழிகள் மற்றும் நிவாரணம் குறித்து விளக்கியுள்ள ஏர் இந்தியா நிறுவனம், ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்திருந்த பயணிகள் அனைவருக்கும் ரத்து கட்டணம் ஏதுமின்றி முழுத் தொகையும் (Full Refund) திருப்பி வழங்கப்படும் என்றும், அல்லது அவர்கள் விரும்பினால் கூடுதல் கட்டணமின்றி மறுதேதிக்கு பயணத்தை மாற்றிக் கொள்ளும் வசதியும் செய்து தரப்படும் என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.   

சவுதி அரேபியாவில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியர்கள் மற்றும் புனித உம்ரா பயணம் மேற்கொள்வோர் இந்த விமான ரத்து நடவடிக்கையால் சிரமங்களை எதிர்கொண்டு வரும் நிலையில், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து அடுத்தகட்ட முடிவுகள் அறிவிக்கப்படும் என சிவில் விமானப் போக்குவரத்து வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: திருச்செந்தூர் - நெல்லை பயணிகள் ரயில் 7 நாட்கள் ரத்து! தென்னக ரயில்வேயின் முக்கிய அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share