நடுவானில் தாறுமாறாக பறந்த விமானம்! விமானி போதையில் இருந்தது அம்பலம்! அதிரடி நடவடிக்கைக்கு ஏர் இந்தியா பரிந்துரை!
விமானம் தொடர்பான விசாரணை தொடங்கியபோது, அதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், விமானிகளின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தினர்.
புதுடெல்லி: நடுவானில் திடீரென 300 அடி அளவுக்கு கீழிறங்கிய ஏர் இந்தியா விமானம் தொடர்பான விசாரணையில், விமானி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான விபத்து விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட விமானி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்தின் புக்கெட் நகரில் இருந்து டில்லி நோக்கி கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் திடீரென சுமார் 300 அடி கீழே இறங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தில் 20 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் தொடர்பான விசாரணை தொடங்கியபோது, அதில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் இருந்ததும் கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், விமானிகளின் செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகள் கவனம் செலுத்தினர். இதன் ஒரு பகுதியாக விமானிகளுக்கு போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதையும் படிங்க: அமெரிக்கா-ஈரான் போர் எதிரொலி! இந்திய விமான நிறுவனங்களுக்கு செம அடி… 26% சரிந்த பயணிகள் எண்ணிக்கை!
இந்த சோதனையில் தலைமை விமானியின் மாதிரியில் கஞ்சா பயன்படுத்தியதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாக விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, விமானிகளின் போதைப்பொருள் பயன்பாட்டை கண்டறிவதற்கான பரிசோதனைகளை விரிவுபடுத்த ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் இரு விமானிகளின் மாதிரிகளில் சந்தேகத்துக்குரிய முடிவுகள் கிடைத்தன.
எனினும், சில மருந்துகளை உட்கொண்டிருந்தாலும் இதுபோன்ற முடிவுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனவே, உண்மையான காரணத்தை உறுதி செய்வதற்காக அந்த மாதிரிகள் இறுதி மற்றும் விரிவான ஆய்வுக்கு அனுப்பப்பட்டன.
தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சம்பந்தப்பட்ட விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான விபத்து விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட விமானி மீது விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்புக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் விமானிகளின் உடல்நிலை மற்றும் போதைப்பொருள் பரிசோதனை நடைமுறைகள் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகளை மீண்டும் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: 300 அடி கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்! கஞ்சா போதையில் பைலட்? அதிர்ச்சி தகவல்!