ஏர் இந்தியா பயணிகளுக்கு குட்நியூஸ்! செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட சர்வதேச விமான சேவைகள் மீண்டும் தொடக்கம்!
ஏர் இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச இணைப்புகளை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வு காரணமாக தற்காலிகமாக குறைக்கப்பட்டிருந்த சர்வதேச விமான சேவைகளை மீண்டும் தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வரும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பெரும்பாலான நிறுத்தப்பட்ட விமான சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக உலகளவில் விமான நிறுவனங்களின் செயல்பாடுகளில் எரிபொருள் விலை உயர்வு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக, ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சில சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான சேவைகளை தற்காலிகமாக குறைத்திருந்தது.
குறிப்பாக டெல்லி - சிகாகோ, டெல்லி - நியூவார்க், மும்பை - நியூயார்க், டெல்லி - ஷாங்காய், சென்னை - சிங்கப்பூர், மும்பை - டாக்கா மற்றும் டெல்லி - மாலே உள்ளிட்ட முக்கிய சர்வதேச வழித்தடங்களில் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தன.
இதையும் படிங்க: தட்கல் டிக்கெட் வாங்க இனி டோக்கன் அவசியம்! ஆகஸ்ட் 1 முதல் புதிய விதி! ரயில்வே முக்கிய அறிவிப்பு!
இதுதவிர, உள்நாட்டு விமான சேவைகளிலும் 20 முதல் 25 சதவீதம் வரை குறைப்பு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விமான இயக்கச் செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஏர் இந்தியா தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது நிலைமையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டு குறைக்கப்பட்ட விமான சேவைகளை மீண்டும் அதிகரிக்க ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் நிறுத்தப்பட்ட பெரும்பாலான சர்வதேச சேவைகள் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வரும் குளிர்கால விமான அட்டவணையில் பல்வேறு சர்வதேச வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. குறிப்பாக சூரிச், வியன்னா, மெல்போர்ன், டோக்கியோ மற்றும் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் இந்திய பயணிகள், குறிப்பாக மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இந்த அறிவிப்பு நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விமான சேவைகள் அதிகரிப்பதன் மூலம் பயணிகளுக்கு கூடுதல் தேர்வுகள் கிடைப்பதுடன், பயண நேர திட்டமிடலும் எளிதாகும்.
சமீப காலமாக விமானப் போக்குவரத்து துறையில் எரிபொருள் செலவு, விமானங்களின் பராமரிப்பு, பணியாளர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சவால்கள் இருந்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் இந்த முடிவு சர்வதேச இணைப்புகளை மீண்டும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
புதிய விமான சேவை அட்டவணை மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடர்பான விவரங்களை ஏர் இந்தியா தனது அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திருச்சியில் திடீரென மோசமான வானிலை! திருவனந்தபுரத்திற்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்! பயணிகள் அவதி!