போர் நிறுத்தம் அமல் உண்மை தான்.. ஆனா.. இதை கவனிச்சீங்களா? பிரதமருடன் அஜித் தோவல் சந்திப்பு..!
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில் இரு நாட்டுக்கும் இடையில் பதற்றம் தனிந்து உள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடியுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளார்.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாக்., பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியாகினர். பயங்கரவாதிகளுக்கு பதில் அடி தரும் வகையில், இம்மாதம் 6ம் தேதி நள்ளிரவு, ஆபரேஷன் சிந்துார் என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு - காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்திய படைகள் தாக்கி அழித்தன.இந்தியா நடத்திய வான்வழி தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது உள்ளிட்ட 9 பயங்கரவாத முகாம்கள் உருக்குலைந்தன.
இந்திய தாக்குதலில் பலியான பயங்கரவாதிகளை தியாகிகள் போல் சித்தரித்த பாகிஸ்தான், அவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை அளித்தது. அத்துடன் நில்லாமல், இந்திய எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதலை துவங்கியது. ஜம்மு - காஷ்மீரில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைத்து தாக்கிய பாக்., ராணுவத்திற்கு இந்தியாவின் சார்பில் தக்க பதிலடி தரப்பட்டது. ஜம்மு - காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களை நோக்கி, பாக்., ராணுவம் ட்ரோன்களை ஏவி தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டது.
இதையும் படிங்க: பாகிஸ்தானுக்கு பதிலடி.. சுக்கு நூறாகிய சர்கோதா விமானப்படை தளம்.. இந்தியா அதிரடி..!
பாக்., அனுப்பிய அனைத்து ட்ரோன்களையும் இந்தியா தரையிறங்க விடாமல் தாக்கி அழித்தது. அந்த வகையில், 400க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அழித்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. தொடர் தாக்குதலில் ஈடுபட்டதால், பாகிஸ்தானின் வான் தாக்குதல் தடுப்பு ரேடாரை, இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. இந்தியாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத பாகிஸ்தான், பஞ்சாப் மற்றும் காஷ்மீரில் வழிபாட்டு தலங்களை குறிவைத்து தாக்கியது.
இதையடுத்து இந்திய தரப்பிலும் தக்க பதில் அடி தப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவியதால், உலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. இந்திய தாக்குதலை சமாளிக்க முடியாத பாக்., இந்தியாவின் பல ராணுவ, விமானப்படை மையங்களை அழித்ததாக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டது. இந்தியாவின் தரப்பில் இது ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
இதற்கிடையே, இந்தியா - பாக்., ஆகிய இரு நாடுகளுடன் இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய பேச்சுவார்த்தை நல்ல பலன் அளித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எக்ஸ் பக்கத்தில் கருத்து பதிவிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளன. இரு நாடுகளின் அறிவார்ந்த செயலை பாராட்டுகிறேன். இரவு முழுதும் அமெரிக்கா நடத்திய சமாதான பேச்சு பலன் அளித்துள்ளது என அதிபர் டிரம்ப் கருத்து பதிவிட்டார்.
அவரது ட்விட் வெளியான சில நிமிடங்களில் இந்தியாவின் தரப்பிலும் சண்டை நிறுத்தம் உறுதி செய்யப்பட்டது. வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி டில்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பாகிஸ்தான் ராணுவ டைரக்டர் ஜெனரல் இன்று மாலை 3.35க்கு இந்திய ராணுவ டைரக்டர் ஜெனரலை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இரு தரப்பு பேச்சு வார்த்தையில், சண்டையை உடனடியாக நிறுத்துவதாக முடிவானது. இதையடுத்து, இரு தரப்பு ராணுவத்திற்கும் இந்த தகவல் அளிக்கப்பட்டது.
மாலை 5 மணியுடன் இரு தரப்பு சண்டை நிறுத்தப்பட்டது. வரும் 12ம் தேதி இரு தரப்பு ராணுவ அதிகாரிகள் மீண்டும் பேச்சு நடத்துவர் என மிஸ்ரி கூறினார். இதற்கிடையே பாகிஸ்தானும் இந்தியாவும் உடனடியாக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்டதாக பாகிஸ்தான் துணை பிரதமர் இசாக் தர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் எப்போதும் தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் செய்யாமல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக பாடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்தார். இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக இரு நாட்டு எல்லையில் நிலவிய போர் பதற்றம் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசி உள்ளார். இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் இருந்த போது, அஜித் தோவல் தினமும் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதையடுத்து தான் இந்திய ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து முதல் பல்வேறு கட்ட அரசியல் நடவடிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் இருவரும் சந்தித்து இருப்பது இந்தியாவின் அடுத்தக்கட்ட நகர்வை நுட்பமாக்கி உள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவின் மரண அடி! பணிந்தது பாகிஸ்தான்.. போர் பதற்றத்தை தணிக்க கோரிக்கை..!