குண்டுகள் முழங்க!! அரசு மரியாதையுடன் அஜித் பவார் உடல் தகனம்! தலைவர்கள் பங்கேற்பு!
விமான விபத்தில் உயிரிழந்த மஹாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவாரின் உடல், அரசியல் தலைவர்கள், தொண்டர்களின் இறுதி அஞ்சலிக்குப் பிறகு தகனம் செய்யப்பட்டது.
மஹாராஷ்டிரா மாநில துணை முதல்வரும், அரசியல் வட்டாரத்தில் 'தாதா' என்று அழைக்கப்பட்ட அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். இந்த சோகச் செய்தி இந்திய அரசியலை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
ஜனவரி 28-ஆம் தேதி காலை, மும்பையில் இருந்து பராமதி செல்லும் வழியில் அவரது சார்ட்டர்ட் விமானம் (Bombardier Learjet 45) தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மோசமான வானிலை காரணமாக விமானம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் அஜித் பவார் உட்பட 5 பேர் பயணித்தனர். அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்துக்குப் பிறகு உடல்கள் அஹில்யாபாய் ஹோல்கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன. மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அஜித் பவாரின் உடல் அவரது காட்டேவாடி இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதையும் படிங்க: நிதின் நபின் எப்படி பாஜக தலைவரானார்? மூத்த தலைவர்கள் அதிருப்தி! மோடி முடிவால் உள்ளுக்குள் புழுங்கல்!
அங்கு மனைவி சுனேத்ரா பவார், மகன்கள் பார்த் மற்றும் ஜெய் முன்னிலையில் அரசு மரியாதை செலுத்தப்பட்டது. தேசிய கொடி சுற்றப்பட்ட நிலையில் உடல் ஊர்வலமாக பராமதியில் உள்ள வித்யா பிரதிஸ்டான் மைதானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அரசியல் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், சரத் பவார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் திரண்டு வந்து இரங்கல் தெரிவித்தனர்.
இறுதியாக அஜித் பவாரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மாநில அரசு சார்பில் 3 நாள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அஜித் பவார் 66 வயதில் இறந்தார். அவர் நீண்ட காலமாக மஹாராஷ்டிரா அரசியலில் முக்கிய பங்காற்றி வந்தவர். பல முறை துணை முதல்வராக பதவி வகித்தவர். NCP கட்சியில் முக்கிய தலைவராக இருந்தார். அவரது மறைவு மாநில அரசியலில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது. பிளாக் பாக்ஸ் மீட்கப்பட்டுள்ளது. அஜித் பவாரின் மறைவு அவரது குடும்பத்தையும், தொண்டர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: மக்களை சீரழிக்கும் இரட்டை இன்ஜின் ஆட்சி!! இது வளர்ச்சிக்கானதே அல்ல!! பாஜக மீது ராகுல் விமர்சனம்!