×
 

“ஜோலி முடிச்சது...” - ஈரானின் இதயத்தில் குண்டு மழை பொழியும் அமெரிக்கா... 2வது நாளாக தொடரும் தீவிர அட்டாக்...!

இன்று ஈரானின் புஷெர் மற்றும் கார்க் தீவு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கா குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் விரிவான ராணுவத் தாக்குதலை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இதற்கு முன் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் (MoU) இனி செல்லாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் அமெரிக்கா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இன்றைய தாக்குதலில், ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள புஷெர் ) மற்றும் கார்க் தீவு ஆகிய முக்கிய இடங்கள் குறிவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புஷெர் பகுதியில் ஈரானின் முக்கிய அணுமின் நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியைத் தாக்குவதன் மூலம் ஈரானின் மின் உற்பத்தி மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை பாதிக்க அமெரிக்கா முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது.

அதேபோல், கார்க் தீவு ஈரான் பொருளாதாரத்தின் இதயமாகக் கருதப்படுகிறது. ஈரானில் இருந்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 90 சதவீதம் இந்தத் தீவின் வழியாகவே அனுப்பப்படுகிறது. மேலும், கோடிக்கணக்கான பேரல்கள் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கும் மிகப்பெரிய எண்ணெய் சேமிப்பு மற்றும் ஏற்றுமதி மையங்களும் அங்கு அமைந்துள்ளன. எனவே இந்தத் தீவை இலக்காகக் கொண்ட தாக்குதல், ஈரானின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

அமைதி ஒப்பந்தம் எப்படி உருவானது?

கடந்த ஜூன் மாதம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பல வாரங்கள் நீடித்த மோதலுக்குப் பிறகு, சர்வதேச நாடுகளின் மத்தியஸ்தத்தில் தற்காலிக அமைதி ஒப்பந்தம் (Memorandum of Understanding - MoU) எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களாக இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்துவது, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீண்டும் சீரமைப்பது, அமெரிக்கா கடற்படை தடைகளை தளர்த்துவது மற்றும் 60 நாட்களுக்குள் நிரந்தர ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியவை இடம்பெற்றிருந்தன.

மீண்டும் போர் ஏன் வெடித்தது?

அமைதி ஒப்பந்தம் அமலில் இருந்தபோதிலும், ஹார்முஸ் நீரிணையில் மூன்று வணிகக் கப்பல்கள் தாக்கப்பட்ட சம்பவம் பதற்றத்தை மீண்டும் அதிகரித்தது. இந்தத் தாக்குதலுக்கு ஈரானே பொறுப்பு என அமெரிக்கா குற்றம்சாட்டி, கடுமையான ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அதே நேரத்தில், அமைதி ஒப்பந்தத்தை முதலில் மீறியது அமெரிக்காதான் என்று ஈரான் குற்றம்சாட்டி, வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக தெரிவித்தது. இதனால் இரு நாடுகளும் ஒருவரை ஒருவர் ஒப்பந்தத்தை மீறியதாக குற்றம்சாட்டி, அமைதி பேச்சுவார்த்தை முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

இந்த புதிய மோதல் மத்திய கிழக்கில் மட்டுமல்லாமல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம், சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் எரிபொருள் விலைகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. உலக நாடுகள் பதற்றத்துடன் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share