×
 

மீண்டும் மத்திய கிழக்கைச் சூழ்ந்த போர் மேகம்... வானிலிருந்து பொழியும் குண்டு மழை... அமெரிக்கா - ஈரான் இடையே சரமாரி தாக்குதல்...!!

அமெரிக்கா – ஈரான் இடையே மீண்டும் கடும் மோதல்: ஏவுகணை, ட்ரோன் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மீண்டும் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கப் படைகள் வான்வழியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்திய நிலையில், அதற்குப் பதிலடியாக அமெரிக்காவின் ராணுவ முகாம்கள் மீது ஈரான் சரமாரியாக ஏவுகணைகளையும் ட்ரோன்களையும் ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஈரானின் முக்கிய ராணுவப் பிரிவான இஸ்லாமிய புரட்சிகர காவல் படை இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. தங்களை முதலில் தாக்கிய அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

ஜோர்டான் நாட்டில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம் மீது சக்திவாய்ந்த ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பலர் உயிரிழந்ததாகவும் ஈரான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அமெரிக்க அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க: மீண்டும் வெடித்தது மத்திய கிழக்கு மோதல்! அமெரிக்க தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

இதேபோல், பஹ்ரைன் நாட்டில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் மீதும் பல ட்ரோன்களை ஏவி ஈரான் பெரிய அளவில் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈரான் ஏவிய ஏவுகணைகள் ஜோர்டான் நாட்டின் வான்வெளிக்குள் நுழைந்ததும், அங்கு எச்சரிக்கை சைரன் ஒலிக்கப்பட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை அந்நாட்டு ராணுவம் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தியது. மீதமுள்ள 3 ஏவுகணைகள் மக்கள் வசிக்காத வெட்டவெளிப் பகுதிகளில் விழுந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

அதே நேரத்தில், ஈரானிய ட்ரோன்கள் தங்கள் வான்வெளிக்குள் நுழைய முயன்றபோது, குவைத் நாட்டு ராணுவமும் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அவற்றை இடைமறித்து தடுத்து நிறுத்தியுள்ளது. இதனால் அண்டை நாடுகள் அனைத்தும் தற்போது தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன.

தெற்கு ஈரானில் உள்ள ராணுவ மற்றும் பொதுமக்கள் தளங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அப்பகுதியில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரானியப் படைகள் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக, ஈரானின் கதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் கர்னல் இப்ராஹிம் ஸோல்ஃபகாரி தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல்களால் உள்கட்டமைப்புகள், வசதிகள், ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டதாகவும், மேலும் “கணிசமான எண்ணிக்கையிலான” அமெரிக்கத் தளபதிகள் மற்றும் வீரர்கள் கொல்லப்பட்டதாகவோ அல்லது காயமடைந்ததாகவோ அவர் தெரிவித்துள்ளார்.

“அமெரிக்கர்கள் தங்களது குற்றங்களுக்காக வருந்தும் வரை, அவர்களுக்கு எதிரான இந்தத் தாக்குதல் நடவடிக்கைகள் தொடரும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் செல்லும் ஹார்முஸ் கடல் பகுதியில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது. தெற்கு ஈரானில் உள்ள துறைமுக நகரங்கள் மற்றும் விமான நிலையப் பகுதிகளில் பெரும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஹார்முஸ் கடல் பாதையில் கண்ணிவெடிகளை வைக்க முயன்ற ஈரானின் திட்டத்தை முறியடிக்கவே நாங்கள் தாக்குதல் நடத்தினோம். ஈரான் மீண்டும் அமெரிக்கா மீது கைவைத்தால், இதுவரை பார்க்காத அளவுக்கு மிகக் கடுமையான தாக்குதலை அவர்கள் சந்திக்க வேண்டியிருக்கும்” என்று எச்சரித்துள்ளார்.

இதையும் படிங்க: பாரன் டிரம்ப் தலைக்கு ரூ.95 கோடி பரிசு!! டிரம்ப் குடும்பத்தை அதிரவைத்த ஈரான் அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share