பாகிஸ்தானுக்கு தூக்கமே இல்லை! அமேதியில் தயாராகும் ஏகே-203... பயங்கரவாதிகள் குறித்து அமித் ஷா பரபரப்பு தகவல்!
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளை தந்து வருகின்றன” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
கிரேட்டர் நொய்டா: உத்தரப் பிரதேசத்தில் உள்நாட்டிலேயே பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிக்கப்படுவது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை தொடங்கிய உத்தரப் பிரதேச சர்வதேச வர்த்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் பேசிய அவர், பிரம்மோஸ் ஏவுகணை மற்றும் ஏகே-203 துப்பாக்கி தயாரிப்பு குறித்து குறிப்பிட்டார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி, சித்ரகூட், லக்னோ, ஆக்ரா, அலிகர், கான்பூர் உள்ளிட்ட பகுதிகளில் முதலீடுகள் அதிகரித்து வருவதாக அமித் ஷா கூறினார். பாதுகாப்பு உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வளர்ந்து வருவது மாநிலத்தின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய அறிகுறியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
“உள்நாட்டில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகளை தந்து வருகின்றன” என்று அமித் ஷா குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: 2029 டிசம்பர் 31... இந்தியாவில் போதைப்பொருள் முற்றிலும் ஒழிக்கப்படும்! அமித் ஷா வைத்த அதிரடி கெடு!!
உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், இது மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.
அதேபோல், அமேதியில் தயாரிக்கப்படும் ஏகே-203 ரக துப்பாக்கிகள் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படைகளின் திறனை அதிகரிக்கும் வகையில் இருப்பதாகவும் அமித் ஷா கூறினார். அமேதியில் ஏகே-203 துப்பாக்கிகள் தயாரிக்கும் திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
உலகளவில் பல்வேறு சவால்கள் நிலவி வரும் நிலையிலும் இந்தியா தனது பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருவதாக அமித் ஷா தெரிவித்தார். ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதில் மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், பல்வேறு நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். முதலீடுகளை ஈர்க்க ஒரு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை சிறப்பாக இருப்பது மிகவும் அவசியம் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.
கிரேட்டர் நொய்டாவில் நடைபெறும் இந்த வர்த்தகக் கண்காட்சி செப்டம்பர் 25 முதல் 29-ம் தேதி வரை நடைபெறுகிறது. உலக சந்தையுடன் உத்தரப் பிரதேச தொழில் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை இணைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இதையும் படிங்க: வளர்ந்த இந்தியாவின் முதுகெலும்பு இளைஞர்கள்! பிரதமர் மோடி சொன்ன முக்கிய தகவல்!