பயங்கரவாதமே இல்லாத காஷ்மீர் தான் இலக்கு!! அதிகாரிகளுக்கு அமித்ஷா கொடுத்த அசைன்மெண்ட்!
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை முற்றிலுமாக வேரறுக்கவும், நிலையான அமைதியை நிலைநாட்டவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீரை விரைவில் உருவாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் ஜம்மு காஷ்மீரின் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்கா, மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், உளவுத்துறை இயக்குநர் தபன் குமார் தேகா, ஜம்மு காஷ்மீர் தலைமைச் செயலாளர், டிஜிபி ஆர்.ஆர். ஸ்வைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய ஆயுதப்படைப் படைகளின் தலைவர்களும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அமித் ஷா, "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஜம்மு காஷ்மீரில் நிலையான அமைதியை ஏற்படுத்தவும், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்கவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் தொடர் நடவடிக்கைகளால், ஒரு காலத்தில் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நிறைந்திருந்த ஜம்மு காஷ்மீர் தற்போது அதில் இருந்து பெருமளவு விடுபட்டுள்ளது" என்று கூறினார்.
இதையும் படிங்க: அமித்ஷாவுடன் பேசியது என்ன? OPS, சசிகலாவுக்கு இடமிருக்கா..? EPS பரபரப்பு பேட்டி...!
சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள நல்ல மாற்றங்களையும், மக்கள் பயன்களையும் தக்க வைத்துக் கொள்ள பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று அமித் ஷா அறிவுறுத்தினார். பயங்கரவாத உள்கட்டமைப்புகளை முற்றிலுமாக அழிக்கவும், பயங்கரவாதத்துக்கு நிதி ஆதாரங்களை முடக்கவும் தீவிர நடவடிக்கை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
"பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் என்ற இலக்கை விரைவில் அடைவதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என்று அமித் ஷா கூறினார். இந்தக் கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம், எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள், உள்ளூர் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு எதிராக திரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
ஜம்மு காஷ்மீரில் அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்ந்து முன்னேறி வருவதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கூட்டம் அந்த முயற்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: VERY SORRY… மத உணர்வை தூண்டி குளிர் காய முடியாது… முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்..!