கொடுத்த வாக்குறுதி என்னாச்சு..? காவலர்களை வஞ்சிக்கும் திமுக அரசு.. டிடிவி தினகரன் கடும் சாடல்..!
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் – தேர்தலுக்கு முன்பாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுத்து காவலர்களை வஞ்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இதையும் படிங்க: மா விவசாயிகளோட வயித்துல அடிக்காதீங்க முதல்வரே.. ஆளும் அரசை தோலுரித்த நயினார் நாகேந்திரன்..!
தமிழக காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையின் படி 2002ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த காவலர்களுக்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பதவி உயர்வு மறுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் 389வது வாக்குறுதியாக இடம்பெற்றிருந்த காவலர்களுக்கு இருபது ஆண்டுகளில் சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கப்படும் என்ற வாக்குறுதிக்கு முரணாக அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், அனைத்து காவலர்களுக்கும் வாரவிடுப்பு, மாவட்ட அளவில் காவலர்கள் குறைதீர்க்கும் அமைப்பு என அள்ளி வீசிய வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றாத திமுக அரசு, அறிவிக்காத வாக்குறுதியாக பதவி உயர்வை தடுத்திருப்பது காவலர்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும்.
ஏற்கனவே, ஆளுங்கட்சியினரின் தலையீடு, காவலர்கள் பற்றாக்குறை, பணிச்சுமை அதிகரிப்பு, பெருகிவரும் குற்றச்சம்பவங்கள் ஆகியவற்றால் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கும் காவலர்களுக்கு திமுக அரசு பிறப்பித்திருக்கும் இந்த புதிய அரசாணை கூடுதல் மன உளைச்சலை அளித்திருப்பதோடு, அவர்களின் பணித்திறனை மேலும் பாதிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு பதவி உயர்வில் பாரபட்சம் காட்டும் அரசாணையை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, 2002 முதல் 2010 ஆம் ஆண்டு பணிக்கு சேர்ந்த காவலர்களுக்கும் சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி உயர்வை வழங்கிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அடியோடு சீர்குலைந்த சுகாதாரத்துறை.. ஆளும் திமுக அரசை கிழித்து தொங்கவிட்ட டிடிவி தினகரன்..!