மக்களே உஷார்! ஆந்திராவை அச்சுறுத்தும் கொரோனா! மத்திய அரசு அலர்ட்! முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதையடுத்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு உடனடியாகப் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கடப்பா மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவ அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு மாநில அரசு அவசர உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, காய்ச்சல், சளி, இருமல் மற்றும் கடுமையான சுவாசக் கோளாறுகளுடன் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளை சிறப்பு கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இரண்டிலும் இந்த நடைமுறைகள் கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப, கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடமிருந்து உடனடியாக மாதிரிகள் சேகரித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகளின் விவரங்களை ஒருங்கிணைந்த தகவல் தளத்தில் தாமதமின்றி பதிவேற்ற வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பவன் கல்யாணுக்கு என்ன ஆச்சு?! தீராத வலி! வேதனை!! உடனே ஆப்ரேஷன் செய்ய டாக்டர்கள் அட்வைஸ்!
மேலும், பி.சி.ஆர். பரிசோதனை கருவிகள், முகக்கவசங்கள், கிருமிநாசினிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் தேவையான மருந்துகள் போதுமான அளவில் இருப்பதை அனைத்து மருத்துவமனைகளும் உறுதி செய்ய வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள், ஆக்ஸிஜன் வசதி கொண்ட படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவு, வென்டிலேட்டர்கள் மற்றும் அவசர மருத்துவ போக்குவரத்து வசதிகளும் முழுமையாக செயல்படும் நிலையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள், புதிய வைரஸ் வகைகளை கண்டறியும் மரபணு வரிசைப்படுத்தல் (Genome Sequencing) பரிசோதனைக்காக நியமிக்கப்பட்ட ஆய்வகங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் வைரஸ் பரவல் தன்மை மற்றும் புதிய மாறுபாடுகள் குறித்து விரைவாக கண்டறிய முடியும் என சுகாதாரத்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் அனைத்தும் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும் என்றும், நோயாளிகளை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் கொரோனா பாதிப்பு மீண்டும் பதிவாகியுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளாமல், காய்ச்சல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு, சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: எல்லையை விரிவு செய்த பவன் கல்யாண்! தெலுங்கானா அரசியலில் ஜனசேனா என்ட்ரி!!