ரயிலில் இருந்து மாயமான புதுப்பெண்.. தேடிப்போன போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
ஆந்திராவில் 8 பேரைத் திருமணம் செய்வதாக நம்ப வைத்து நகை மற்றும் வரதட்சணையைச் சுருட்டிய மோசடிப் பெண்ணையும் அவரது அத்தையையும் போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரத்தைச் சேர்ந்த வாணி (19) என்ற இளம்பெண், தனது தாய்வழி அத்தை சந்தியாவின் வளர்ப்பில் வளர்ந்து வந்துள்ளார். பெற்றோர் இல்லாத வாணியைத் தனது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்ட அத்தை சந்தியா, அவரை வைத்து ஒரு மோசடித் திட்டத்தைத் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவருக்கும் வாணிக்கும் ஸ்ரீகாகுளம் துர்காதேவி கோயிலில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் வாணிக்கு நகைகளையும், கைச்செலவிற்கு ஒன்றரை லட்சம் ரூபாயையும் கொடுத்துள்ளனர்.
திருமணம் முடிந்து புதுமணத் தம்பதிகள் ரயிலில் கர்நாடகா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, விஜயநகரம் ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. அப்போது கழிவறைக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற வாணி, நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த மணமகன் வீட்டார் வாணியைத் தேடியலைந்துவிட்டு, இறுதியில் இச்சாபுரத்தில் உள்ள அத்தை சந்தியாவின் வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு வாணி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், தாங்கள் கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாயைத் திருப்பித் தருமாறு கேட்டுள்ளனர். பணத்தைத் தருவதாகச் சொல்லி அவர்களை வீட்டிலேயே தங்க வைத்த சந்தியாவும் வாணியும், நள்ளிரவில் வீட்டைப் பூட்டிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்.
இதையும் படிங்க: இந்த ட்ரெஸ்லாம் போடவே கூடாது..!! கர்நாடக அரசு ஊழியர்களுக்கு பறந்த ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!!
இது குறித்து இச்சாபுரம் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர வைக்கும் உண்மைகள் வெளியாகின. அத்தை சந்தியாவின் தூண்டுதலின் பேரில், வாணி இதுவரை கர்நாடகாவைச் சேர்ந்தவர் உட்பட மொத்தம் 8 பேரைத் திருமணம் செய்து நகை மற்றும் பணத்தைச் சுருட்டியுள்ளது தெரியவந்தது. மாப்பிள்ளை வீட்டாரை நம்ப வைத்து, ‘எதிர் வரதட்சணை’ என்ற பெயரில் பணத்தைப் பெற்றுக்கொண்டு, திருமணம் முடிந்த சில நாட்களிலேயே நகைகளுடன் ஓட்டம் பிடிப்பதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவரை ஏமாந்தவர்கள் வாணி மைனர் பெண் என்பதால் புகார் அளிக்கத் தயங்கியுள்ளனர். ஆனால், தற்போது 19 வயதான நிலையில், அவரால் ஏமாற்றப்பட்ட நாகிரெட்டி மற்றும் கேசவ ரெட்டி ஆகியோர் புகார் அளித்ததையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான அத்தை மற்றும் மருமகளைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மாதவிடாய் விடுப்புக்கு இடைக்கால தடை..?? கொஞ்ச நேரத்தில் நடந்த ட்விஸ்ட்..!! கர்நாடக ஐகோர்ட் அதிரடி..!!