அனில் அம்பானிக்கு அடுத்த அதிர்ச்சி..! ரூ.1,021 கோடி சொத்துகளை முடக்கிய அமலாக்கத்துறை.. விசாரணை தீவிரம்!
அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பண மோசடி விசாரணையில், மேலும் 1,021 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
தொழிலதிபர் அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிராக நடைபெற்று வரும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை (ED) மேலும் ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக, ரூ.1,021 கோடி மதிப்பிலான கூடுதல் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்த நடவடிக்கை தொழில்துறை மற்றும் நிதி வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனில் அம்பானி குழும நிறுவனங்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை, அவை பெறப்பட்ட நோக்கத்திற்கு மாறாக பயன்படுத்தியதாக இந்திய ஸ்டேட் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பு புகார் அளித்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. பின்னர், சி.பி.ஐ. பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டம் (PMLA) கீழ் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியது.
அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டின்படி, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் மற்றும் ரிலையன்ஸ் கமர்ஷியல் பைனான்ஸ் நிறுவனங்கள் பொதுமக்களிடம் திரட்டிய சுமார் ரூ.15,548 கோடி நிதி, விதிமுறைகளுக்கு மாறாக வேறு பயன்பாடுகளுக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பல்வேறு நிதி பரிவர்த்தனைகள் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இதையும் படிங்க: திமுக நிர்வாகியின் மகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு!! தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை! பரபரக்கும் புதுக்கோட்டை!
இந்த வழக்கின் தொடர்ச்சியாக, ரிலையன்ஸ் இன்பிராஸ்ட்ரக்சர் நிறுவனத்திடம் உள்ள ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் பங்குகள் உள்ளிட்ட ரூ.1,021 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது. இதன் மூலம், இந்த வழக்கில் இதுவரை முடக்கப்பட்ட மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ.20,367 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும், இந்த வழக்கில் இதுவரை நான்கு குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், அன்னிய செலாவணி மேலாண்மைச் சட்டம் (FEMA) கீழ் ரூ.77.86 கோடி மதிப்பிலான சொத்துகளும் தனியாக முடக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு எதிரான இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என்பது தொழில்துறை மற்றும் முதலீட்டு வட்டாரங்களில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: துரோகம் பண்ண என்ன இருக்கு?! திமுக இத பண்ணலையே! திருமாவளவன் பரபரப்பு விளக்கம்!!