×
 

'வீ தி லீடர்ஸ்' அடுத்த அதிரடி! புதிய அமைப்புடன் களமிறங்கும் அண்ணாமலை!! புதிய திட்டம் என்ன?

சென்னையில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் சார்பில், ஆக., 16ம் தேதி, அண்ணாமலை தலைமையில் பேரணி நடக்க உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் புதிய முயற்சிகளுடன் செயல்பட்டு வரும் அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பு, சென்னையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க உள்ளது.

தமிழக பா.ஜ., முன்னாள் தலைவராக இருந்த அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகிய பின்னர் ‘வீ தி லீடர்ஸ்’ என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பின் மூலம் சமூக அக்கறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த மாதம் முழுவதும் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, ஆகஸ்ட் மாதத்தை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாதமாக முன்னெடுக்க அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதன்படி, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ஏரி, கால்வாய் சுத்தப்படுத்துதல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதையும் படிங்க: சமூக மாற்றத்திற்காக பணிகளை துவங்குங்கள்; வீ த லீடர்ஸ் தலைவர் அண்ணாமலை அழைப்பு

மேலும், ஆகஸ்ட் 2-ஆம் தேதி தென் மாவட்டங்களில் உள்ள கடலோர பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகளில் அண்ணாமலை பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, உவரி, தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி சென்னையில் பெரிய அளவிலான பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதான சாலை பகுதியில் அண்ணாமலை தலைமையில் இந்த பேரணி நடைபெறும் என அமைப்பு அறிவித்துள்ளது.

இதற்கிடையே, அமைப்பின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் ‘வீ தி லீடர்ஸ்’ என்ற பெயரில் புதிய மொபைல் செயலியையும் அண்ணாமலை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த செயலி மூலம் புதிய உறுப்பினர்கள் இணைய முடியும் என்றும், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களது அடையாள எண்ணை பயன்படுத்தி பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக சேவை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் மக்களை இணைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அமைப்பு தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அண்ணாமலையின் புதிய அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் சென்னையில் நடைபெற உள்ள பேரணி தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: அக்டோபர் 15! அண்ணாமலையின் புதிய திட்டம்! அப்துல் கலாம் பிறந்தநாளில் தொடங்கும் ‘அரசியல் அறநெறி மையம்’!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share