ரூ.3,000 கோடி போதைப்பொருள் கடத்தல் முறியடிப்பு! 5 பாகிஸ்தானியர்கள் கைது! அரபிக்கடலில் அதிரடி ஆப்ரேஷன்!
இந்த நடவடிக்கை மூலம் இந்திய கடல் வழியாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மும்பை: அரபிக்கடலில் லட்சத்தீவுக்கு மேற்கே இந்திய கடலோரக் காவல்படை மற்றும் குஜராத் பயங்கரவாத தடுப்புப் பிரிவு இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், ரூ.3,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 526 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஈரான் நாட்டைச் சேர்ந்த படகில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனையில், அதில் இருந்த 5 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில், சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அரபிக்கடலில் சென்று கொண்டிருப்பதை இந்திய கடலோரக் காவல்படையினர் கண்காணித்தனர். இதையடுத்து கடல் மற்றும் வான்வழி கண்காணிப்பு மூலம் படகின் நடமாட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செப்டம்பர் 25-ம் தேதி லட்சத்தீவுக்கு மேற்குப் பகுதியில் அந்தப் படகை பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்போது படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உயர்தர போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இதையும் படிங்க: நெதர்லாந்தில் 2 வயது குழந்தை கருணைக் கொலை! உலகையே உலுக்கும் சோக நிகழ்வு! ஆய்வறிக்கை அதிர்ச்சி தகவல்!
சோதனையில் ஹெராயின் மற்றும் மெத்தாம்பெட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் மொத்தம் 526 கிலோ இருப்பது தெரியவந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.3,000 கோடிக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
படகில் இருந்த 5 பாகிஸ்தானியர்களையும் அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் போதைப்பொருட்களின் மூலாதாரம், அவற்றை யாரிடம் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது, சர்வதேச கடத்தல் வலையமைப்பில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள், ஈரான் படகு மற்றும் கைது செய்யப்பட்டவர்களை ஆயுதமேந்திய பாதுகாப்புடன் மும்பைக்கு கொண்டு வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நடவடிக்கை மூலம் இந்திய கடல் வழியாக மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளில் ஒன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரபிக்கடல் வழியாக சர்வதேச போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் கடல் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கடத்தலின் பின்னணியில் செயல்பட்டவர்கள் யார், போதைப்பொருட்கள் எந்த நாட்டிலிருந்து கொண்டு வரப்பட்டன, இந்தியாவில் அவற்றை யாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டது என்பன உள்ளிட்ட முக்கிய கேள்விகளுக்கு விசாரணையின் முடிவில் பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகள் நடமாட்டம்! காஷ்மீரில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அதிரடி சோதனை! தீவிர வேட்டை!