×
 
☰

செம...! இந்தியாவின் தங்க வேட்டை... வில்வித்தையில் மேலும் ஒரு தங்கம்... கும்கும் மோகத் அசத்தல்...!!

ஆசிய விளையாட்டு போட்டியின் வில்வித்தை பிரிவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்க பதக்கம் கிடைத்திருக்கிறது

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. வில்வித்தை பெண்கள் தனிநபர் ரீகர்வ் பிரிவில் இந்திய வீராங்கனை கும்கும் மோகத் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்கொரியாவின் ஓ யேஜினை கும்கும் மோகத் எதிர்கொண்டார். இருவருக்கும் இடையிலான போட்டி 5-5 என சமநிலையில் முடிந்ததால், வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட்-ஆஃப் நடத்தப்பட்டது. அதில் கும்கும் மோகத் 10 புள்ளிகளுக்கு துல்லியமாக அம்பை செலுத்தினார். தென்கொரிய வீராங்கனை 8 புள்ளிகள் மட்டுமே பெற்ற நிலையில், கும்கும் மோகத் 6-5 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையையும் கும்கும் மோகத் படைத்துள்ளார். மேலும், இந்த வெற்றியின் மூலம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான இந்தியாவின் ஒரு கோட்டாவும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற ஆடவர் ஸ்குவாஷ் வீரர்கள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

17 வயதான கும்கும் மோகத்துக்கு இது இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிடைத்த மூன்றாவது பதக்கமாகும். முன்னதாக பெண்கள் ரீகர்வ் அணிப் பிரிவில் அங்கிதா பகத், கீர்த்தி சர்மா ஆகியோருடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அதேபோல், தீரஜ் பொம்மதேவராவுடன் இணைந்து கலப்பு ரீகர்வ் அணிப் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார்.

குறிப்பாக, பெண்கள் ரீகர்வ் அணிப் பிரிவில் அங்கிதா பகத், கீர்த்தி சர்மா, கும்கும் மோகத் ஆகியோர் இணைந்து தென்கொரியாவை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருந்தனர். இந்தப் பிரிவில் தென்கொரியா 1998ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், இந்திய அணி அந்த நீண்ட கால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

கும்கும் மோகத்தின் தனிநபர் தங்கத்துடன், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வில்வித்தை பிரிவில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கையும் மேலும் உயர்ந்துள்ளது. அக்டோபர் 2ஆம் தேதி நிலவரப்படி வில்வித்தையில் இந்தியா நான்கு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் ஆறு பதக்கங்களைப் பெற்றிருந்தது.

இந்தியாவின் பதக்க வேட்டை:

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா தொடர்ந்து பல்வேறு விளையாட்டுகளில் பதக்கங்களை குவித்து வருகிறது. அக்டோபர் 3ஆம் தேதி காலை நிலவரப்படி இந்தியா 17 தங்கம், 25 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 77 பதக்கங்களைப் பெற்றிருந்தது.

கடந்த 2023ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா 28 தங்கம் உட்பட மொத்தம் 107 பதக்கங்களை வென்று, ஆசிய விளையாட்டு வரலாற்றில் தனது அதிகபட்ச பதக்க எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. அந்தப் போட்டியில் தடகளம், துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, மல்யுத்தம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தினர்.

அதேபோல், 2018 ஜகார்த்தா-பாலெம்பாங் ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் இந்தியா 70 பதக்கங்களை வென்று அப்போது தனது சிறந்த ஒட்டுமொத்த செயல்பாட்டை பதிவு செய்திருந்தது.

இந்நிலையில், 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவடையும் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்க வேட்டையை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக வில்வித்தையில் அடுத்தடுத்து கிடைத்து வரும் பதக்கங்கள் இந்திய அணியின் செயல்பாட்டில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

அந்த வரிசையில், 17 வயதே ஆன கும்கும் மோகத் பெண்கள் தனிநபர் ரீகர்வ் பிரிவில் தங்கம் வென்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பெருமையை தேடித் தந்துள்ளார்.

இதையும் படிங்க: ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனைகள்: தலா ரூ.30 லட்சம் பரிசு அறிவித்தார் முதல்வர் விஜய்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share