ஏமாற்றினால் கம்பி எண்ணனும்! 2வது திருமணம் செய்தால் 10 ஆண்டு சிறை!! அசாமில் அசத்தல்!
முதல் திருமணத்திலிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறாமல், இரண்டாவது திருமணம் செய்து கொள்பவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் மசோதா அசாம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
கவுகாத்தி: அசாம் சட்டப்பேரவையில் நேற்று (நவம்பர் 27, 2025) பலதார மணம் மற்றும் விவாகரத்து இல்லாமல் இரண்டாம் திருமணம் செய்வதை முற்றிலும் தடுக்கும் கடுமையான மசோதா நிறைவேற்றப்பட்டது. இனி முதல் மனைவியுடன் சட்டப்பூர்வ விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்தால் குறைந்தது 7 ஆண்டு முதல் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், பெரும் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து குற்றம் செய்தால் இரு மடங்கு தண்டனை. அத்தகைய திருமணங்களைச் செய்து வைப்பவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறை + ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
மிக முக்கியமாக, இந்தக் குற்றம் செய்தவர்கள் இனி அரசு வேலைக்கு தகுதியற்றவர்கள், அரசு மானியம், நிதி உதவி எதுவும் பெற முடியாது, பஞ்சாயத்து முதல் எந்த உள்ளாட்சித் தேர்தலிலும் போட்டியிட முடியாது என்று மசோதாவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்தச் சட்டம் அசாமின் ஆறாவது அட்டவணைப் பகுதிகளான போடோலாந்து, கர்பி அங்லாங், வடக்கு கச்சார் ஹில்ஸ் போன்ற பழங்குடியினர் வாழும் பகுதிகளுக்கு பொருந்தாது என்று விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: “ஆண்டவனே வந்தாலும் நடக்காது”... செங்கோட்டையன் தவெகவில் இணைய காரணம் இதுதான்... திமுக முக்கிய புள்ளி சொன்ன தகவல்...!
மசோதா நிறைவேறியதும் பேசிய முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “இந்தச் சட்டம் எந்த ஒரு மதத்தையும் குறிவைத்தல்ல, அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். இது பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம். அசாமில் இனி யாரும் முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய முடியாது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று நான் மீண்டும் முதலமைச்சரானால், அசாமில் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) கொண்டு வருவேன். இது இந்த அவைக்கு நான் அளிக்கும் உறுதிமொழி” என்று தீர்க்கமாக அறிவித்தார்.
அசாமில் ஏற்கெனவே முஸ்லிம் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்ட நிலையில், இப்போது இந்தக் கடுமையான சட்டம் நிறைவேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் இந்து வாக்கு வங்கியை திரட்டும் முயற்சி என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினாலும், பெண்கள் நல ஆர்வலர்கள் இதை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டையே சிதைக்க நினைத்தவனுக்கு அடைக்கலம்?! உமருக்கு உதவிய மற்றொரு கயவன்!! 7வது நபரை தட்டித்தூக்கிய என்.ஐ.ஏ!