தமிழகம் VS கர்நாடகா…! முதல்வர் விஜயின் மேகதாது எதிர்ப்பு தீர்மானம்… எதிர்க்கட்சிகள் ஒருமித்த குரல்..!!
மேகதாது விவகாரம் தொடர்பான முதல்வர் விஜயின் தனி தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சர் முன்மொழிந்த மேகதாது எதிர்ப்பு தனித் தீர்மானத்திற்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. முதல்வர் விஜய் கொண்டு வந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். மேலும், சுதந்திரம் ஆகிய நாள் முதல் இன்று வரை காவிரி நீர், முல்லைப் பெரியாறு, மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வே இல்லை என பிரேமலதா விஜயகாந்த் சட்டசபையில் குறிப்பிட்டு பேசினார்.
தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழ்நாடு எப்போது மாறப்போகிறது என்று கேள்வி எழுப்பினார். தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உடன் மேகதாது விவகாரம் குறித்து பேச வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழ்நாடு நீர் மிகை மாநிலமாக மாற வேண்டும் என்றும் அதற்காக ஆறுகளை இணைக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து முதல்வர் விஜயின் தனி தீர்மானத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகள் நலனுக்காக முதல் கூட்டத் தொடரிலேயே தீர்மானத்தை முன்மொழிந்ததற்கு சிபிஎம் எம்எல்ஏ செல்ல சுவாமி வரவேற்பு தெரிவித்தார். லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்க கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் முதல்வர் விஜயின் தனி தீர்மானத்திற்கு மதிமுக முழு ஆதரவை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆரம்பமே அதிரடி..! மேகதாதுவுக்கு எதிர்ப்பு..! பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த முதல்வர் விஜய்..!
மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கை தயாராகிறது என கர்நாடக முதல்வர் பேசி இருந்ததாகவும், முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் மதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் தனி தீர்மானத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரவு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஐந்தரை கோடி மக்கள் காவிரி நீரை நம்பி இருப்பதாக பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி தெரிவித்தார். கர்நாடகாவில் 320 கிலோமீட்டர் மட்டுமே காவிரி நீர் பாய்கிறது என்றும் தமிழ்நாட்டில் 420 கிலோமீட்டர் ஓடுகிறது காவிரி நீர் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "கர்நாடகாவில் யார் ஆண்டால் நமக்கென்ன?" - மேகதாது திட்டத்தை எதிர்ப்போம் என பிரவீன் சக்கரவர்த்தி அதிரடி!