ஆயுள் தண்டனை வேண்டாம்... பவாரியா கொள்ளையர்கள் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு...!
ஆயுள் தண்டனையை எதிர்த்து பவாரியா கொள்ளையர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.
2005-ஆம் ஆண்டு தமிழக அரசியலை உலுக்கிய ஒரு கொடூர சம்பவம் நடந்தது. அதிமுகவின் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்.எல்.ஏ.வாகவும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் இருந்த கே. சுதர்சனம், தனது வீட்டில் நள்ளிரவில் கொள்ளையர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே உள்ள தானாக்குளம் கிராமத்தில் அமைந்திருந்த அவரது வீட்டிற்குள் ஐந்து பேர் கொண்ட கும்பல் புகுந்தது. கதவை உடைத்து உள்ளே நுழைந்த அவர்கள், சுதர்சனத்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, வீட்டில் இருந்த 62 பவுன் தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்தச் சம்பவம் அப்போது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.விசாரணையில் தெரியவந்த உண்மை இன்னும் அதிர்ச்சிகரமானது.
இந்தக் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த பவாரியா இனத்தைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. பவாரியா கொள்ளையர்கள் என்று அழைக்கப்படும் இந்தக் கும்பல், தென்னிந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள பணக்கார வீடுகளை குறிவைத்து ஆயுதங்களுடன் கொள்ளையடிப்பதில் பெயர் பெற்றவர்கள். லாரி டிரைவர்களாக வேடமிட்டு, வட இந்தியாவிலிருந்து தெற்கு நோக்கி பயணிக்கும்போது இதுபோன்ற குற்றங்களை அரங்கேற்றி வந்தனர்.
வழக்கில் மொத்தம் 32 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கைதானவர்களில் ஓம்பிரகாஷ், போரா உள்ளிட்டோர் சிறையில் இறந்துவிட்டனர். மூன்று பெண்கள் ஜாமீனில் சென்ற பிறகு தலைமறைவாகினர். மீதமுள்ள நான்கு பேர் ஜெகதீஷ் , ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் மீது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 86 சாட்சிகளை விசாரித்து, பல ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு, நவம்பர் 21 அன்று நீதிபதி எல். ஆப்ரஹாம் லிங்கன், ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகிய மூவரை குற்றவாளிகள் என்று அறிவித்தார். ஜெயில்தர் சிங்கை விடுதலை செய்தார். நவம்பர் 24 அன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. கொலை, கொள்ளை, ஆயுதம் வைத்திருந்தல் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் மூவருக்கும் தலா நான்கு முதல் ஐந்து ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இதையும் படிங்க: E-FILING முறை வேண்டாம்... சென்னையில் வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்...!
இந்த நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி பவாரியா கொள்ளையர்கள் மேல் முறையீடு செய்துள்ளனர். ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் தனக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். பவாரியா கொள்ளையர்கள் தாக்கு செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நான்கு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என பெரியபாளையம் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்... அரசிதழில் வெளியிட தமிழக அரசுக்கு கெடு... ஹைகோர்ட் ஆனை..!