பாகிஸ்தானிடம் போர் விமானங்கள் வாங்கும் வங்கதேசம்! இந்தியாவை எதிர்ப்பதில் முழு மும்முரம்! காத்திருக்கும் ஆபத்து?!
நம் அண்டை நாடான பாகிஸ்தானிடமிருந்து மற்றொரு அண்டை நாடான வங்கதேசம் ஜே.எப்., 17 ரக போர் விமானங்கள் வாங்க முடிவு செய்துள்ளது.
இஸ்லாமாபாத்: அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது. வங்கதேச விமானப்படை ஜே.எப்-17 தண்டர் ரக போர் விமானங்களை பாகிஸ்தானிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு "ஆர்வம்" தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் அறிவித்துள்ளது. இதுதொடர்பான விரிவான பேச்சுவார்த்தைகள் இரு நாட்டு விமானப்படைத் தலைவர்கள் இடையே நடைபெற்றுள்ளன.
பாகிஸ்தான் விமானப்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற உயர்மட்ட சந்திப்பில் வங்கதேச விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஹசன் மஹ்மூத் கான் தலைமையிலான உயரதிகாரிகள் குழு பங்கேற்றது. பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஜஹீர் அஹ்மத் பாபர் சித்துவுடன் நடத்திய பேச்சுவார்த்தியில், ஜே.எப்-17 போர் விமானங்களின் சாத்தியமான கொள்முதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த விமானம் சீனா-பாகிஸ்தான் இணைந்து உருவாக்கிய அதிநவீன மல்டி-ரோல் போர் விமானமாகும்.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவான இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ISPR) வெளியிட்ட அறிக்கையில், "இரு நாட்டு விமானப்படைகளும் இயக்கத் திறன், பயிற்சி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றை வலுப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதையும் படிங்க: அழுது கொண்டே HIT ஆர்டர் போட்ட கஸ்டமர்... டெலிவரி பாய் செய்த நெகிழ்ச்சி சம்பவம்...!
ஜே.எப்-17 தண்டர் விமானங்களின் சாத்தியமான கொள்முதல் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடைபெற்றது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வங்கதேச விமானப்படைக்கு சூப்பர் முஷ்ஷாக் பயிற்சி விமானங்களை விரைவாக வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று ரீதியான உறவுகளை வலுப்படுத்தும் வகையில் இந்த ஒத்துழைப்பு அமையும் என்று பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. வங்கதேச இடைக்கால அரசு பொறுப்பேற்ற பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் விரைவாக மேம்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, கராச்சி மற்றும் டாக்கா இடையே ஜனவரி 29 ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இது 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கும் சேவையாகும்.
ஜே.எப்-17 விமானம் பாகிஸ்தானின் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது. இது ஏற்கனவே அஜர்பைஜான், லிபியா போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேச விமானப்படை தற்போது பழைய ரக விமானங்களை இயக்கி வருவதால், இந்த கொள்முதல் அவர்களின் திறனை பெரிதும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தெற்காசியாவில் புதிய அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். வங்கதேசத்தில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த முன்னேற்றங்கள் கவனம் பெற்றுள்ளன.
இதையும் படிங்க: எப்படியாவது ஜெயிச்சிருங்க! இல்லையினா என் பதவி போயிரும்? புலம்பி தள்ளிய அதிபர் ட்ரம்ப்!