போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்? வங்கதேசத்தில் இந்து ஆசிரியர் குடும்பமே கொலை; 2 பேர் கைது!
உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
டாக்கா: வங்கதேசத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதை தட்டிக்கேட்ட ஓய்வு பெற்ற இந்து ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினர் நான்கு பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கதேசத்தின் ரங்பூர் மாவட்டம் தாஸ்பாரா பகுதியில் வசித்து வந்தவர் கணபதி சக்ரவர்த்தி (65). ஓய்வு பெற்ற ஆசிரியரான இவருடன் மனைவி பிரிதிலா (50), மகள் ஆகமி (23), மகன் பிரியம் சக்ரவர்த்தி (12) ஆகியோர் வசித்து வந்தனர். கணபதி கடந்த டிசம்பர் மாதம் ரங்பூர் நகரில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தார். அதன் பிறகு ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சில நாட்களாக கணபதி மற்றும் அவரது குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த உறவினர் ஒருவர் போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து போலீசார் கணபதியின் வீட்டுக்கு சென்று, கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவெளியில் தோன்றும் ஷேக் ஹசீனா! வங்கதேச அரசியலில் மீண்டும் பரபரப்பு!
அப்போது வீட்டுக்குள் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் வெவ்வேறு இடங்களில் சடலமாக கிடந்தது தெரியவந்தது. உடல்களை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
விசாரணையில், கணபதியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்த இருவர், அவரது வீட்டின் மாடியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக போலீசாருக்கு தெரியவந்தது. இதை கணபதியும் அவரது குடும்பத்தினரும் கண்டித்து தட்டிக்கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த இருவரும் குடும்பத்தினர் மீது தாக்குதல் நடத்தி கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர்.
மேலும், கொலை செய்த பின்னரும் சந்தேகத்துக்குரிய வகையில் அந்த நபர்கள் அங்கிருந்து உடனடியாக தப்பிச் செல்லாமல், பல மணி நேரம் வீட்டிலேயே இருந்து சமைத்து சாப்பிட்டு, குளித்துவிட்டு சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து முக்தா தாஸ் மற்றும் சிப்பார்த்தா தாஸ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கொலைக்கான முழுமையான காரணம், சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: வங்கதேசம் திரும்பினால் கைது! ஷேக் ஹசீனாவுக்கு புதிய சிக்கல்!! அமைச்சர் விடுத்த கடும் எச்சரிக்கை!