வங்கதேச வன்முறையில் கொல்லப்பட்ட இளைஞர்!! மதவெறுப்பை பரப்பினாரா? வங்கதேச போலீஸ் விசாரணை!
வங்கதேசத்தில் முஸ்லிம் மதத்திற்கு எதிராக வெறுப்பு கருத்துக்கள் பரப்பியதாக ஹிந்து இளைஞர் சமீபத்தில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அவர் மத வெறுப்பை பரப்பியதற்கு நேரடி ஆதாரங்கள் ஏதுமில்லை என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தின் மைமென்சிங் நகரில் ஹிந்து இளைஞர் திபு சந்திர தாஸ் (27) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது. முஸ்லிம் மதத்துக்கு எதிராக வெறுப்பு கருத்துகளை பரப்பியதாகக் கூறி ஒரு கும்பல் அவரைத் தாக்கி கொன்றது. பின்னர் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் அவரது உடலை மரத்தில் கட்டி தீ வைத்து எரித்தனர்.
இச்சம்பவம் கடந்த 18-ஆம் தேதி இரவு நடந்தது. அன்று அவாமி லீக் கட்சியினரால் சுடப்பட்ட மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி இறந்த செய்தி வெளியானதும் பல நகரங்களில் கலவரம் வெடித்தது. இதைப் பயன்படுத்தி மைமென்சிங்கில் இந்தக் கொடூரச் செயல் நடந்தது.
இதற்கு சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்த நிலையில், போலீசார் ஏழு பேரை கைது செய்தனர். வழக்கை விசாரிக்கும் போலீஸ் உயரதிகாரி சம்சுஜமான் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், “திபு சந்திர தாஸ் ஃபேஸ்புக்கில் மத வெறுப்பைத் தூண்டும் பதிவுகள் எதுவும் செய்ததற்கு நேரடி ஆதாரம் இல்லை. இது வெறும் வதந்தியால் ஏற்பட்ட கொடூரச் செயல்” என்று தெரிவித்தார். அவருடன் பணியாற்றியவர்களிடம் விசாரித்தபோது, திபு எந்த மத வெறுப்பு கருத்தும் பேசியதில்லை என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!
வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான போராட்டங்களும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், சிட்டகாங் நகரில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையத்தின் செயல்பாடுகள் நேற்று முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு சூழலை மறு ஆய்வு செய்த பிறகே மீண்டும் திறக்கப்படும் என்று இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிட்டகாங்கில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான போக்கு தொடர்வது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: வங்கதேசத்தில் தலைவிரித்தாடும் வன்முறை!! முகமது யூனுஸை வறுத்தெடுக்கும் ஷேக் ஹசீனா!!