×
 

5 கோரிக்கைகள்.. 11ம் தேதி நாடு தழுவிய ஸ்ட்ரைக்..!! வங்கி ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு!!

தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற வாய்ப்பளிக்க வேண்டும்.

வங்கித் துறையில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, யுனைடெட் போரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (யூ.எஃப்.பியூ) நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. செப்டம்பர் 11 வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இந்தப் போராட்டம், வாரத்தில் ஐந்து நாட்கள் வேலைத்திட்டம், ஊதிய சீரமைப்பு மற்றும் ஓய்வூதிய தொடர்பான பிரச்சினைகளை மையமாகக் கொண்டது. 

தொழிலாளர் நலத்துறை மற்றும் இந்திய வங்கிகள் சங்கத்துடன் நடைபெற்ற சமரசப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததால், சங்கங்கள் போராட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடிவு செய்துள்ளன.யூ.எஃப்.பியூவில் ஏழு முக்கிய சங்கங்கள் இணைந்துள்ளன. இவை பொதுத்துறை, தனியார், வெளிநாட்டு, பிராந்திய கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. 

முதன்மையான கோரிக்கையாக வாரத்தில் ஐந்து நாட்கள் வங்கி வேலைத்திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. 2024 மார்ச் 8-ம் தேதி கையெழுத்தான 12-வது இருதரப்பு ஒப்பந்தத்தின்படி, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் 40 நிமிடங்கள் கூடுதல் நேரம் பணியாற்றினால் அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறையாக அறிவிக்கப்படும் என இரு தரப்பினரும் ஏற்கனவே ஒப்புக்கொண்டனர். ஆனால் இந்தப் பரிந்துரை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. 

இதையும் படிங்க: கூடலூரில் பந்த்... ஆட்கொல்லி புலிக்கு எதிராக மக்கள் கொந்தளிப்பு...! முடங்கிய நகரம்..!!

ரிசர்வ் வங்கி, எல்.ஐ.சி., நாபார்டு போன்ற நிறுவனங்களில் ஏற்கனவே ஐந்து நாள் வேலைமுறை நடைமுறையில் உள்ளது என்பதையும் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.மேலும், உயர் அதிகாரிகளுக்கு மட்டும் அதிக ஊக்கத்தொகை வழங்கும் பாகுபாடான செயல்திறன் அடிப்படையிலான புதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. பழைய முறையில் அனைத்து ஊழியர்களுக்கும் சமமான ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நிலைப்பாடு. 

ஓய்வூதியத் தொகையை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்துவதுடன், தேசிய ஓய்வூதியத் திட்டத்திலிருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறும் வாய்ப்பையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது. சங்கங்களின் தொடர் எதிர்ப்பைத் தொடர்ந்து, மத்திய நிதிச் சேவைகள் துறை பொதுத்துறை வங்கிகளின் உயர் அதிகாரிகளுக்கான செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

இருப்பினும், ஐந்து நாள் வேலை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளில் தெளிவான அறிவிப்பு வராததால், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற சங்கங்கள் மறுத்துவிட்டன.செப்டம்பர் 11 வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து கோரிக்கைகள் ஏற்கப்படாவிட்டால், செப்டம்பர் 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் தொடர் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரையற்ற போராட்டமும் நடைபெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்துடன் வார இறுதி விடுமுறை இணைவதால், பொதுத்துறை வங்கிகளில் காசோலை பரிவர்த்தனை, பணப்பரிமாற்றம் உள்ளிட்ட நேரடி சேவைகள் மூன்று முதல் நான்கு நாட்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. டிஜிட்டல் சேவைகள் இயங்கக்கூடும் என்றாலும், கிளை அளவிலான பணிகள் பாதிக்கப்படும் என வங்கிகள் எச்சரித்துள்ளன.

இதையும் படிங்க: இன்று ஆட்டோ, டாக்ஸி, ஜீப் எதுவுமே ஓடாது... ஊட்டியில் வெடித்தது மிகப்பெரிய போராட்டம் ... காரணம் என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share