×
 

தேதி குறிச்சாச்சு!! சென்னை வரும் பியூஸ் கோயல்! அதிமுக - பாஜக கூட்டணி அடுத்த மூவ்!

தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல் வருகிற டிச. 22 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியை (தேஜக) வலுப்படுத்தும் பணியில் பாஜக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக தமிழக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் திமுக கூட்டணி ஓரளவு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக-பாஜக தலைமையிலான தேஜக கூட்டணியில் இன்னும் பல சிக்கல்கள் நீடிக்கின்றன. அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம், அமமுகவில் டி.டி.வி. தினகரன் ஆகியோர் விலகியுள்ள நிலையில் அவர்களை மீண்டும் இணைக்க பாஜக முயற்சி மேற்கொண்டு வருகிறது. 

பாமகவில் நிறுவனர் ராமதாஸ் - அன்புமணி இடையே கடும் மோதல் நிலவுகிறது. தேமுதிக ஜனவரி மாதம்தான் கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளது. இத்தகைய சவால்களுக்கு மத்தியில் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதிப் பங்கீட்டை விரைவுபடுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமிழக தேர்தல் பொறுப்பாளராக பாஜக நியமித்துள்ளது.

இதையும் படிங்க: அடம் பிடித்த இபிஎஸ்! இறங்கி வந்த பாஜக! தேர்தல் பொறுப்பாளர் நியமனத்தின் ரகசிய பின்னணி!

பியூஷ் கோயல் ஏற்கெனவே பல மாநிலங்களில் கூட்டணி சார்ந்த பிரச்னைகளைத் தீர்த்து வைத்த அனுபவம் வாய்ந்தவர் என்பதால் இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சென்னை வரும் பியூஷ் கோயல் முதலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் டிசம்பர் 17 அன்று பாஜகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. பாஜக மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர்கள் கே. அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தேர்தல் பணிகள், மத்திய தலைவர்களின் தமிழக வருகை, கூட்டணி உத்திகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்குள் தேஜக கூட்டணியில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து கட்சிகளை இணைக்கும் பணிகள் முடிவடையும் என பாஜக எதிர்பார்க்கிறது.

தமிழக அரசியலில் தேஜக கூட்டணியை வலுப்படுத்த பாஜக மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பியூஷ் கோயலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: திருமாகிட்ட பேசி நிறுத்த சொல்லுங்க ஸ்டாலின்?! விசிக திடீர் ப்ளான்!! திமுகவுக்கு புது சிக்கல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share