×
 

திமுகவா? தவெகவா? தமிழக காங்.,சில் கோஷ்டி மோதல்! விளாசும் நயினார் நாகேந்திரன்!

தமிழக காங்கிரசுக்குள் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. கோஷ்டிகளாக மோதிக் கொள்கின்றனர் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

சென்னை: தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளதாகவும், காங்கிரஸ் கட்சிக்குள் பெரும் குழப்பம் நிலவுவதாகவும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், "தமிழகத்தில் 17, 18 வயது இளைஞர்கள் கையில் பாடப் புத்தகங்களுக்குப் பதிலாக அரிவாள் வைத்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது. தொடர்ச்சியாக நடக்கும் குற்றச் செயல்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன்" என்றார்.

தமிழக அரசை கலைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிய அவர், "வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலேயே மக்கள் தீர்ப்பு வழங்கி ஆட்சி மாற்றம் நிகழ்ந்துவிடும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கும் வைகோவின் சமத்துவ நடைபயணம்?! காங்கிரஸ் புறக்கணிப்பு!! கூட்டணிக்குள் சலசலப்பு!!

தமிழக காங்கிரஸ் கட்சியின் உள்நிலை குறித்து பேசிய நயினார், "காங்கிரஸுக்குள் ஏராளமான குழப்பங்கள் உள்ளன. பல கோஷ்டிகளாக மோதிக்கொள்கின்றனர். சிலர் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) உடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்கின்றனர். இதுவே அக்கட்சியின் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. 1996இல் காங்கிரஸிலிருந்து பிரிந்து தமாகா உருவானது போன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.

திமுக அரசின் நிதி மேலாண்மையை விமர்சித்த அவர், "அதிமுக ஆட்சியில் ரூ.4.5 லட்சம் கோடியாக இருந்த மாநிலக் கடன், தற்போது ரூ.9 லட்சம் கோடியைத் தாண்டிவிட்டது. நிதி நிலைமை சரியில்லாததால், மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என்றார்.

நடிகர் விஜயின் அரசியல் நிலைப்பாடு குறித்து கூறிய நயினார், "விஜய் சில நிகழ்வுகளுக்கு மட்டுமே கருத்து தெரிவிக்கிறார். அது சரியான அணுகுமுறை அல்ல" என்று விமர்சித்தார்.

மேலும், "பொங்கலுக்குப் பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அதிமுகவில் இணைந்தால் வரவேற்கிறேன்" என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தடையின்றி கிடைக்கும் போதைப்பொருள்!! தமிழகத்தில் காட்டாட்சி ராஜ்ஜியம்! அண்ணாமலை குற்றச்சாட்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share