×
 

கேரளாவில் ஆழமாக காலூன்றும் பாஜக! உள்ளாட்சி மட்டுமல்ல சட்டசபையிலும் எதிரொலிக்குமா வெற்றி?!

கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க சில மாதங்களே இருக்கின்றன. அதற்கு முன்னோட்டமாக நடந்த உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெற்றி காற்று யார் பக்கம் வீசப் போகிறது என்பதை உணர்த்தி இருக்கிறது.

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக அமைந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், மாநில அரசியலில் பெரிய மாற்றத்தை உணர்த்தியுள்ளன. இதுவரை இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யு.டி.எஃப்) ஆகிய இரு கூட்டணிகளுக்கு இடையேயான இருமுனைப் போட்டியாக இருந்த கேரள அரசியல், இப்போது மும்முனைப் போட்டியாக மாறியிருக்கிறது.

குறிப்பாக, 45 ஆண்டுகளாக இடதுசாரிகளின் கோட்டையாக இருந்த தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) பெரும்பான்மையுடன் கைப்பற்றியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமின்றி, 26 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 4 நகராட்சிகளிலும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இது அக்கட்சியின் செல்வாக்கு வலுவாக அதிகரித்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி மொத்தம் 505 கிராம ஊராட்சிகள், 79 ஊராட்சி ஒன்றியங்கள், 7 மாவட்ட ஊராட்சிகள், 54 நகராட்சிகள் மற்றும் 4 மாநகராட்சிகளில் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: எலெக்சனுக்கு வந்தீங்களா? பிக்னீங் வந்தீங்களா? கேரளாவில் படுமோசமான தோல்வி! அதிமுக பொறுப்பாளர்களுக்கு டோஸ்!

ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கோழிக்கோடு மாநகராட்சியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள இடதுசாரிகள், 340 கிராம ஊராட்சிகள், 63 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 28 நகராட்சிகளில் மட்டுமே வென்றுள்ளனர். இது கடந்த உள்ளாட்சித் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் பெரும் வீழ்ச்சியாகும்.

இடதுசாரிகளின் கோட்டைகளாகக் கருதப்பட்ட பல பகுதிகள் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. வசம் சென்றுள்ளன. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் பெரிய மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே முன்பு அவசரமாக திட்டங்களை அறிவித்தது மக்களிடம் எடுபடவில்லை.

மேலும், தங்கக் கடத்தல் வழக்கு, சபரிமலை தங்கம் திருட்டு விவகாரம், ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை ஆளும் கூட்டணிக்கு எதிரான மனநிலையை அதிகரித்துள்ளன.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்பாராத வகையில் திருச்சூர் தொகுதியை நடிகர் சுரேஷ் கோபி வென்றது பா.ஜ.க.வுக்கு வெற்றியின் விதையை ஊன்றியது. அதன் தொடர்ச்சியாக உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றி, வரும் சட்டசபைத் தேர்தலில் பா.ஜ.க. கணிசமான தொகுதிகளை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது இடத்துக்கான போட்டியில் கூட பா.ஜ.க. முந்திவிடலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

கேரள அரசியலில் பா.ஜ.க.வின் இந்த உயர்வு, சட்டசபைத் தேர்தலை மிகவும் சுவாரஸ்யமாக்கியுள்ளது.

இதையும் படிங்க: நோட்டாவுக்கு NO!! என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!! கேரள உள்ளாட்சி தேர்தல்! தேர்தல் ஆணையம் அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share