மகாராஷ்டிராவில் யாருக்கு பலம்!! இன்று வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்!
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜன. 16) நடைபெறவுள்ளது. நேற்று காலை முதல் மாலை வரை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், இன்று முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் 29 மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நேற்று (ஜனவரி 15) நடைபெற்றது. இன்று (ஜனவரி 16) காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மும்பை பெருநகராட்சி (BMC) உள்ளிட்ட முக்கிய நகரங்களான புணே, நாக்பூர், நாசிக், சத்ரபதி சாம்பாஜிநகர் போன்றவற்றில் இந்தத் தேர்தல் நடைபெற்றது. மும்பையில் மட்டும் 227 வார்டுகளுக்கு சுமார் 1,700 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 2,869 இடங்களுக்கு 15,931-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களமிறங்கினர்.
நேற்று காலை 7:30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5:30 மணி வரை நடைபெற்றது. சில இடங்களில் நேரம் சற்று நீட்டிக்கப்பட்டது. ஆனால் ஒட்டுமொத்தமாக வாக்குப்பதிவு மந்தமாகவே இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் பாட்டுனா ரொம்ப புடிக்கும்!! பாட்டு பாடி VIBE செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!
மாநில தேர்தல் ஆணையர் தினேஷ் வாக்மார் கூறியதன்படி, மாநில அளவில் 46-50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மும்பையில் 41.08%, புணேயில் 36.95%, நாக்பூரில் 41.23%, சத்ரபதி சாம்பாஜிநகரில் 43.67%, நாசிக்கில் 39.63% வாக்குகள் பதிவாகின. மிகக் குறைவாக கொலாபா பகுதியில் 15.73% மட்டுமே பதிவானது.
இந்தத் தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி (பாஜக, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்) மற்றும் எதிர்க்கட்சி மகா விகாஸ் அகாடி கூட்டணி (காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை, சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ்) இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகளின்படி, பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக மும்பையில் அவர்களுக்கு பெரும்பான்மை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் 23 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. 2,299 அதிகாரிகள் இப்பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பெட்டிகள் இரவோடு இரவாக எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்தத் தேர்தல் முடிவுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அலங்காநல்லூரிலும் என் காளை சீறும்! டிராக்டர் வென்ற உற்சாகத்தில் காளை உரிமையாளர் விருமாண்டி!