×
 

தர்பூசணி சாப்பிட்ட 15 வயது சிறுவன் பலி?... மேலும் 3 சிறுவர்கள் உயிருக்கு போராட்டம்... நடந்தது என்ன?

தர்பூசணியை சாப்பிட்ட சில நேரத்திலேயே சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தின் ஜாஞ்ச்கீர் மாவட்டத்தில் உள்ள சம்பா பகுதியில் நடைபெற்ற ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குர்கோட் பகுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 15 வயதுடைய அகிலேஷ் திவாரி என்ற சிறுவன் உயிரிழந்துள்ளார்.

திருமண நிகழ்ச்சி முடிந்த பிறகு, அவர் தனது உறவினர் வீட்டிற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு துண்டுகளாக வெட்டி வைக்கப்பட்டிருந்த தர்பூசணி பழத்தை அவர்கள் சாப்பிட்டுள்ளனர். தர்பூசணியை சாப்பிட்ட சில நேரத்திலேயே சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக அருகிலிருந்தவர்கள் மற்றும் உறவினர்கள் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அகிலேஷ் திவாரி உயிரிழந்துள்ளார். மற்ற சிறுவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிமுகவை உடைக்கும் எண்ணம் இல்லை..!! சசிகலா, டிடிவி-யை இணைக்க வேண்டும்..!! எஸ்.பி.வேலுமணி விருப்பம்..!!

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதையடுத்து, “தர்பூசணி சாப்பிட்டதால் உயிரிழப்பு ஏற்பட்டது” என்ற தகவலும் பரவி வருகிறது. எனினும், மருத்துவர்கள் தெரிவிப்பதாவது, பல மணி நேரங்களுக்கு முன்பே வெட்டப்பட்டிருந்த தர்பூசணி பழம் கெட்டுப்போயிருக்கலாம் அல்லது அதில் ஏதேனும் நச்சுப் பொருள் கலந்திருக்கலாம் என விளக்கம் அளித்துள்ளனர். 

உயிரிழந்த சிறுவனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை வெளியான பிறகே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் அதிகாரப்பூர்வமாக தெரியவரும். மேலும் 3 சிறுவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்பும் மும்பையில் இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றது. அங்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர், விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி பழம் சாப்பிட்டதையடுத்து உயிரிழந்தனர். ஆரம்பத்தில் “பிரியாணி சாப்பிட்ட பிறகு தர்பூசணி சாப்பிடக்கூடாது” என்ற தவறான தகவல் பரவியது. பின்னர் நடைபெற்ற தடயவியல் மற்றும் பிரேதப் பரிசோதனை விசாரணையில், அவர்கள் சாப்பிட்ட தர்பூசணியில் நஞ்சு கலந்திருந்தது என்பதே உயிரிழப்புக்கான காரணம் என்று உறுதியானது.

இதன் மூலம், தர்பூசணி பழம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்பது தவறான தகவல் என்பது தெளிவானது. உண்மையில், தர்பூசணி என்பது நீர்ச்சத்து நிறைந்த மற்றும் உடலுக்கு நன்மை தரக்கூடிய முக்கியமான பழமாகும். குறிப்பாக கோடைக்காலங்களில் உடலின் நீர்ச்சத்தை பாதுகாக்க இது உதவுகிறது.

தற்போதைய சம்பவத்திலும், அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கைகள் வெளியாகும் வரை எந்தவித வதந்திகளையும் பரப்ப வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்பூசணி பழமே உயிரிழப்புக்குக் காரணம் என்று உறுதி செய்யப்படாத நிலையில், தவறான தகவல்களை பரப்புவது தேவையற்ற அச்சத்தையும் குழப்பத்தையும் உருவாக்கும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதையும் படிங்க: திமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டார் இபிஎஸ்..!! சிவி சண்முகம் அதிரடி பேச்சு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share