×
 

ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்களின் உரையுடன் தொடங்கியது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரின் முதல் கட்டம் இன்று முதல் ஜனவரி 13-ஆம் தேதி வரை நீடிக்கிறது. இரண்டாவது கட்டம் மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறும். வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

நாடாளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை கூடுவது வழக்கம். அதன்படி, ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்குகிறது. இன்றைய உரையில், அரசின் திட்டங்கள், எதிர்கால முன்னெடுப்புகள் குறித்த அறிவிப்புகளை குடியரசுத் தலைவர் விவரித்தார். குறிப்பாக, உலக அளவில் அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதாக அவர் குறிப்பிட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் முழக்கத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: “அன்புமணி அறிவித்த கூட்டணி செல்லாது; ராமதாஸ் அமைப்பதே வெற்றிக் கூட்டணி!” - தைலாபுரத்தில் பரபரப்புத் தகவல்!

நாளை பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட் சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட். தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வரும் சட்டமன்றத் தேர்தல்களை முன்னிட்டு, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது அமெரிக்காவின் வரி விதிப்பு மற்றும் உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக, உலக அளவில் விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், நடுத்தர மக்கள் பயனடையும் வகையில் ஏதேனும் நிவாரண அறிவிப்புகள் வருமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எதிர்க்கட்சிகள் தரப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், 125 நாள் வேலைத்திட்டத்தில் மகாத்மா காந்தி பெயர் நீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால், நாடாளுமன்றத்தில் கடுமையான விவாதங்கள் எழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூட்டத்தொடருக்கு முன்னதாக நேற்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரிஜிஜு, “இந்த கூட்டத்தொடரில் பட்ஜெட் விவகாரங்களிலேயே கவனம் செலுத்தப்படும். பல்வேறு கட்சிகளின் பரிந்துரைகளை கவனத்தில் கொண்டுள்ளோம். விதிகளின்படி விவாதங்கள் பட்ஜெட்டைச் சுற்றியே இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் சுமுகமாக செயல்பட வேண்டும். பட்ஜெட்டை நிறைவேற்றுவதே முக்கிய நோக்கம். பிற பிரச்சினைகளுக்கு விவாதிக்க அரசு தயாராக உள்ளது” என்றார்.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பொருளாதார சீர்திருத்தங்கள், வரி சலுகைகள், வேளாண் மற்றும் தொழில்துறை மேம்பாட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன. உலகப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில், இந்தியாவின் வளர்ச்சி இலக்குகளை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: "மகாராஷ்டிராவிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு!" - அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share