தமிழக கல்லூரிகளில் அதிக கட்டணம்.. கைவிரித்த தமிழக அரசு..! சிஏஜி அறிக்கையில் குற்றச்சாட்டு..!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் மாணவர்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமாக விண்ணப்பங்களுக்கு பெறப்படுகிறது என்று தலைமைக் கணக்குப்பதிவாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
கல்லூரி மற்றும் உயர்கல்வி இயக்குநர் கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்களுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. இதன்படி இளநிலை படிப்புகளுக்கு விண்ணப்பங்களுக்கு ரூ.48, முதுநிலை படிப்புகளுக்கு ரூ.58 கட்டணமாக வசூலிக்கலாம், கூடுதலாக ஒவ்வொரு மாணவரிடம் ரூ.2 சேர்த்து வசூலிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
2023, மார்ச் மாதத்துடன் முடிந்த நிதியாண்டு குறித்து சிஏஜி ஆய்வு அறிக்கை நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் “தமிழகத்தில் 95 சுயஉதவி மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 2021-24 வரை 8 மண்டலங்களில் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 72 கல்லூர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கின்றன. அதாவது 1,29,579 மாணவர்களிடம் இருந்து 50 ரூபாய் வசூலிப்பதற்குப் பதிலாக ஒவ்வொரு விண்ணப்பத்துக்கும் ரூ.545 கட்டணமாக வசூலித்துள்ளனர். இது கூடுதலாக ரூ.1.34 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காஞ்சி சங்கர மடத்தின் 71வது இளைய மடாதிபதி பொறுப்பேற்பு; யார் இந்த கணேச சர்மா டிராவிட்?
16க்கும் மேற்பட்ட கல்லூரிகள் 82,389 விண்ணப்பதாரர்களிடம் இருந்து கூடுதலாக கட்டணம் வசூலித்து ரூ.1.28 கோடி சேர்த்துள்ளனர். 2022 ஜூலை மட்டும் ரூ.3.14 கோடி கூடுதலாக மாணவர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக கட்டணம் வசூலித்த கல்லூரிகள் மீது ஏன் தமிழக அரசு தனியார் கல்லூரி ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்கப்பட்டது. இதற்கு தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்கையில் “தமிழக அரசு தனியார் கல்லூரி ஒழுங்குமுறைச்சட்டத்தின் கீழ் தனியார் கல்லூரிகளைக் கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.
அனைத்து கல்லூரிகளும் அரசு வெளியிட்ட உத்தரவின்படி குறிப்பிட்ட கட்டணத்துக்கு மேல் வசூலிக்கக்கூடாது, அரசின் உத்தரவுகளுக்கு பணிய வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஏஜி தெரிவித்தது.ஆனால் தமிழக அரசு தரப்பிலோ 2019-20 முதல் 2021-22 ஆண்டுகளில் கல்லூரியை விட்டு இளநிலைபடிப்பு முடித்து சென்ற மாணவர்களிடம் கூடுதல் கட்டண பணத்தை திருப்பிவழங்குவது கடினமானது என்று தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் மேலூரில் உள்ள அம்பலக்காரன்பேட்டை பகுதியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டி முடிக்கப்பட்டு,அதில் கல்லூரி ஊழியர்களுக்கு தங்குமிடம், விருந்தினர் மாளிகை ஆகியவை கட்டப்பட்டு 6 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. சுற்றுச்சுவர் முறையாககட்டி முடிக்கப்படவில்லை.
கல்லூரியில் ரூ.60.93 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கூட்டஅரங்கு பயன்படுத்தப்படாமல் இருக்கிறது, ரூ.1.18 கோடியில் கட்டப்பட்ட விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சிக்கூடம் 6ஆண்டுகளாக பயன்படுத்தபப்டவில்லை, 13 சதவீத சுற்றுச்சுவர் மட்டுமே கட்டிமுடிக்கப்பட்டு, பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கிறது. கல்லூரிக்குள் இன்னும் மாணவர்களுக்கு குடிநீர் இணைப்பு இல்லை, இருசக்கரவாகன நிறுத்துமிடம் ஆகியவை கட்டப்படவில்லை.
மேலூர் தாலுகாவில் இருந்து தொலைவில் கல்லூரி இருப்பதால் முக்கியத்துவம் கருதி கல்லூரி முதல்வருக்கு தங்குமிடம், விருந்தினர் மாளிகை அவசியமாகக் கட்டப்பட்ட நிலையில் பயன்பாட்டில் இல்லை எனத் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியுடன் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் திடீர் சந்திப்பு.. என்ன காரணம்..?