தெலுங்கானா: லாரி மீது பயங்கரமாக மோதிய கார்..!! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி..!!
காரின் இடிபாடுகளில் சிக்கி சிவகுமார், ராஜேஸ்வரி, ரிஷிதா, ஸ்ரீனிவாஸ் அவரது மகன்கள் கிருஷ்ண சந்திரா, மாதவ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
தெலுங்கானா மாநிலம் ராஜண்ணா சிர்சில்லா பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ் (40) என்பவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி ஸ்வேதா. இவர்களுக்கு கிருஷ்ண சந்திரா (13) மற்றும் மாதவ் (10) ஆகிய இரு மகன்கள் உள்ளனர். ஸ்வேதாவின் சகோதரர் சனத் நகரைச் சேர்ந்த சிவகுமார் (37) தனியார் நிறுவனத்தில் பணியில் இருந்தார். அவரது மனைவி ராஜேஸ்வரி (லாசியா - 35). இவர்களுக்கு ரிஷிதா (7) என்ற மகள் இருந்தாள்.
தொடர் விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி குடும்பத்துடன் பல கோவில்களுக்கு யாத்திரை செல்லும் எண்ணத்தில் ஸ்ரீனிவாஸ் குடும்பத்தினர் நேற்று முன்தினம் காரில் சிவகுமார் வீட்டுக்கு வந்தனர். இரு குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரும் ஒரே காரில் புறப்பட்டு முதலில் யாதகிரி குட்டா கோவிலில் தரிசனம் செய்தனர். அதன் பின்னர் ஸ்வர்ணகிரி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.
நேற்று மேலும் ஒரு கோவிலுக்கு செல்லும் நோக்கில் சிலுகுருவில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு புறப்பட்டனர். ஐதராபாத் புறநகர் பகுதியான தோண்டுப்பள்ளி சாலையில் அவர்கள் பயணித்தபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் அவர்களது கார் அதிவேகத்தில் மோதியது. பயங்கர அதிர்ச்சியுடன் ஏற்பட்ட இந்த மோதலில் கார் முழுவதும் நொறுங்கியது.
இதையும் படிங்க: காவலர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தெலங்கானாவில் பிறந்தநாள், திருமண நாளுக்கு லீவ்..!
காரின் உலோக இடிபாடுகளுக்குள் சிக்கிய சிவகுமார், ராஜேஸ்வரி, ரிஷிதா, ஸ்ரீனிவாஸ், கிருஷ்ண சந்திரா மற்றும் மாதவ் ஆகிய ஆறு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஸ்வேதா மட்டும் பரிதாபமாக உயிர் தப்பினாலும், உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தகவல் அறிந்த ஷம்ஷாபாத் போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கார் இடிபாடுகளை அகற்றி பலியானோரின் உடல்களை மீட்டனர்.
விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், லாரி ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிவேகம், இரவு நேரப் பயணம் மற்றும் சாலையோரம் நிறுத்தப்பட்ட வாகனத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.இந்த சம்பவம் தெலுங்கானா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரு குடும்பங்களின் தூண்களாக இருந்தவர்கள் ஒரே நாளில் இழக்கப்பட்டது அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. சாலை விபத்துகள் தொடர்பாக மாநில அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மூணாவதும் பெண் குழந்தையா? மனைவி, குழந்தைகளை கொலை செய்த கொடூர கணவன்..!!