கட்டுக்கட்டாய் சிக்கிய பணத்தால் சிக்கலில் நீதிபதி..! யஷ்வந்த் வர்மா பணி நீக்க தீர்மானத்துக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!
நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பணி நீக்கும் செய்யும் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா, இந்தியாவின் டெல்லி உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய மூத்த நீதிபதியாவார். 1969 ஜனவரி 6 அன்று பிறந்த இவர், மத்தியப் பிரதேசத்தில் சட்டம் பயின்று, 1992இல் வழக்கறிஞராகப் பதிவு செய்தார். 2016இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், அரசியலமைப்பு, வரிவிதிப்பு, நடுவர் மன்றம், மற்றும் குற்றவியல் வழக்குகளில் முக்கிய தீர்ப்புகளை வழங்கியவர். குறிப்பாக, மருத்துவர் கஃபீல் கான் வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கிய தீர்ப்பு பரவலான கவனத்தைப் பெற்றது.
2025 மார்ச் 14 அன்று, டெல்லியில் உள்ள யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ இல்லத்தில் (துக்ளக் கிரசென்ட்) தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கச் சென்ற தீயணைப்பு வீரர்கள், வீட்டின் சேமிப்பு அறையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கட்டுக்கட்டாகப் பணத்தை, பாதி எரிந்த நிலையில் கண்டெடுத்தனர். இந்தப் பணம் கணக்கில் வராதது எனக் கூறப்பட்டு, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தீயணைப்பு வீரர்கள் பணத்தைப் பார்த்ததை ரகசியமாக வைக்குமாறு நீதிபதியின் மகள் தியாவும், தனிச் செயலாளர் ராஜீந்தர் கார்க்கியும் கேட்டுக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையும் படிங்க: இபிஎஸ் 210 தொகுதி சொன்னா...நான் 220 சொல்லணுமா? உதயநிதி கலகல பேச்சு
இந்தச் சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நீதிபதி வர்மா, இந்தப் பணம் தனக்கோ அல்லது குடும்பத்தினருக்கோ சொந்தமானது அல்ல என்றும், இது தனக்கு எதிரான சதி என்றும் கூறினார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, மார்ச் 22 அன்று இதுகுறித்து விசாரிக்க மூன்று நீதிபதிகள் (பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ்.சாந்தவாலியா, மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் கொண்ட உள் விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டார்.
விசாரணைக் குழு, மே 3 அன்று தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது, இதில் குற்றச்சாட்டுகள் உறுதியானதாகக் கூறப்பட்டது. மேலும், மற்றொரு மாநிலத்தைச் சேர்ந்த பெண் நீதிபதிக்கு இந்தப் பணத்துடன் தொடர்பு இருக்கலாம் என தகவல்கள் வெளியாகின
விசாரணைக் குழுவின் அறிக்கையை அடுத்து, நீதிபதி வர்மாவை பதவி நீக்கம் செய்ய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதினார். ஆனால், வர்மாவை பதவி நீக்குவது அவ்வளவு எளிதல்ல. பார்லிமென்டில் அவர் மீது, 'இம்பீச்மென்ட்' எனப்படும், பணி நீக்க தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.
தீர்மானத்தை கொண்டு வருவதற்கு, லோக்சபாவில், 100 எம்.பி.,க்களின் ஆதரவும், ராஜ்யசபாவில், 50 எம்.பி.,க்களின் ஆதரவும் தேவை. இதற்கான பணிகள் துவங்கி உள்ளன. வரும் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் வரும் ஜூலை 21 முதல் ஆக., 22 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் பணி நீக்க தீர்மானம் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து விசாரணைக் குழு அமைக்கப்படும்.
இந்நிலையில், யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பணி நீக்க தீர்மானம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பணி நீக்க தீர்மானம் எளிதாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணி குழம்புன குட்டை... இபிஎஸ் மீன்-லாம் பிடிக்க முடியாது! சேகர்பாபு விமர்சனம்.