மீண்டும் சிக்கலில் அனில் அம்பானி.. ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு.. களத்தில் இறங்கிய CBI..!!
ரூ.17,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி, ரூ.17,000 கோடி மதிப்பிலான வங்கிக் கடன் மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் (ED) விசாரணையை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் அவர் ஆஜராகி, சுமார் 10 மணி நேரம் கிடுக்கிப்பிடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கு, அனில் அம்பானியின் நிறுவனங்களான ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் ஆகியவை யெஸ் வங்கியில் பெற்ற கடன்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டது.
2017-19 காலகட்டத்தில், ரூ.3,000 கோடி கடன் போலி நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதாகவும், இதற்காக யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாகவும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளன. இந்த மோசடியில், யெஸ் வங்கியின் நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரும் தொடர்புடையவர்களாகக் கருதப்படுகின்றனர். அமலாக்கத்துறை, பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் இவ்வழக்கை விசாரித்து வருகிறது.
இதையும் படிங்க: ரூ.17000 கோடி கடன் மோசடி.. வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம்.. அனில் அம்பானியை நெருங்கும் ED!!
கடந்த ஜூலை 2025 இல், மும்பை மற்றும் டெல்லியில் அனில் அம்பானிக்கு சொந்தமான 35 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையின்போது, கடனை முறைகேடாக மாற்றியது, அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கப்பட்டதா, மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்பட்டதா என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அனில் அம்பானி பல கேள்விகளுக்கு “தெரியாது” என பதிலளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ஒருவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். அனில் அம்பானிக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த அனில் அம்பானியின் நிறுவனங்கள், கடன் மோசடி குற்றச்சாட்டுகளால் தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளன. இவ்வழக்கு மேலும் முக்கிய தகவல்களை வெளிக்கொணரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில்இன்று அதிரடி சோதனை நடத்தியது. இந்த நடவடிக்கை, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு (எஸ்.பி.ஐ) 2,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறப்படும் வங்கி மோசடி வழக்கு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் இது தொடர்பாக சிபிஐ ஒரு முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள பல இடங்களில் சிபிஐ சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சோதனைகள், அம்பானி குடும்பத்தின் மூத்த உறுப்பினரான கோகிலாபென் அம்பானி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் நடைபெறுகின்றன. இந்த வழக்கு தொடர்பாக மேலும் விவரங்கள் வெளியாக உள்ளன.
இதையும் படிங்க: #BREAKING: அனில் அம்பானி வீட்டில் ED RAID.. அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!