×
 

"பெட்ரோல் விலை ரூ.28 உயருமா?" - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு!

தேர்தலுக்குப் பின் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 ரூபாய் வரை உயரப் போவதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் வதந்தி என மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேற்கு வங்கத்தில் இறுதிக்கட்டத் தேர்தல் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 25 ரூபாய் முதல் 28 ரூபாய் வரை அதிரடியாக உயர்த்தப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது முற்றிலும் அடிப்படை ஆதாரமற்ற வதந்தி எனத் தெரிவித்துள்ள பெட்ரோலிய அமைச்சகம், பொதுமக்கள் யாரும் இதனை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது, இப்போதைக்கு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை. தேர்தலுக்கும் விலை நிர்ணயத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை.

நாட்டில் போதிய அளவிற்குப் பெட்ரோல், டீசல் மற்றும் இதர எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளன. எவ்விதத் தட்டுப்பாடும் ஏற்பட வாய்ப்பில்லை. விலை உயரும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் தேவையில்லாமல் பெட்ரோல் நிலையங்களில் வரிசையில் நிற்கவோ அல்லது கேன்களில் எரிபொருளை வாங்கிச் சேமிக்கவோ வேண்டாம். இது பாதுகாப்புச் சிக்கல்களை உருவாக்கும்.

இதையும் படிங்க: 2026 சட்டமன்றத் தேர்தல்..! மே 4 ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்..! தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

மேற்கு வங்கத் தேர்தலை முன்னிட்டு மத்திய அரசு விலையை உயர்த்தாமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும், தேர்தல் முடிந்த மறுநாளே பல மடங்கு விலை உயரும் என்றும் கடந்த சில நாட்களாக வாட்ஸ்அப் உள்ளிட்ட தளங்களில் தகவல்கள் வைரலானது. இதனால் பொதுமக்களிடையே ஒருவிதப் பதற்றம் நிலவிய சூழலில், மத்திய அரசு தற்போது இந்த அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே விலையைத் தீர்மானிக்கின்றன என்றும், வதந்திகளைப் பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பாளையங்கோட்டை அரிவாள் வெட்டுச் சம்பவம்: “அரசியல் உள்நோக்கம் இல்லை!” – காவல்துறை அதிரடி விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share