15 நாள் தான் டைம்..!! பைரசி மீது நடவடிக்கை.. டெலிகிராமுக்கு மத்திய அரசு நோட்டீஸ்..!!
அவ்வாறு செய்ய தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் வழங்கும் பாதுகாப்புச் சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்திய சினிமா மற்றும் ஓடிடி துறையில் அதிகரித்து வரும் பதிப்புரிமை மீறல் மற்றும் திருட்டு உள்ளடக்கப் பகிர்வு விவகாரம் தொடர்பாக, பிரபல குறுஞ்செய்தி செயலியான டெலிகிராமுக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கடுமையான எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரைப்படங்கள், வெப் தொடர்கள் உள்ளிட்ட படைப்புகளை சட்டவிரோதமாக பரப்பும் நடவடிக்கைகளை தடுப்பதில் தளம் போதிய அளவில் செயல்படவில்லை என அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள நோட்டீஸில், டெலிகிராம் தளத்தில் புதிய திரைப்படங்கள், பிரபல ஓடிடி வெப் சீரிஸ்கள் மற்றும் பிற காப்புரிமை பெற்ற உள்ளடக்கங்கள் அனுமதியில்லாமல் பகிரப்படுவது இந்திய படைப்புத் துறையின் வருவாய்க்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், ஓடிடி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட படைப்பாளர்கள் ஆகியோரின் பொருளாதார நிலை பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1957-ஆம் ஆண்டு பதிப்புரிமைச் சட்டம் மற்றும் 1952-ஆம் ஆண்டு சினிமாட்டோகிராஃப் சட்டத்தின் கீழ் இத்தகைய மீறல்கள் வெறும் சிவில் பிரச்சினை அல்லாது, குற்றவியல் நடவடிக்கைக்கு உட்பட்ட கடுமையான குற்றங்களாக கருதப்படுகின்றன எனவும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. இதுவரை புகார்கள் வந்த பிறகே குறிப்பிட்ட சேனல்கள் அல்லது குழுக்கள் நீக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றி, இனி தானாகவே திருட்டு உள்ளடக்கங்களை கண்டறிந்து அவற்றை உடனடியாக அகற்றும் வலுவான கண்காணிப்பு அமைப்பை டெலிகிராம் உருவாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மத்திய அரசின் அதிரடி முடிவு..!! பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நாளை முதல் நீக்கம்..!!
அத்துடன், திரைப்படத் தயாரிப்பாளர்கள், ஓடிடி நிறுவனங்கள், இயக்குநர்கள் மற்றும் காவல்துறை உள்ளிட்டவர்கள் நேரடியாக புகார்கள் அளிக்கக் கூடிய வகையில் குறைதீர்ப்பு மற்றும் புகார் மேலாண்மை அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தவறினால், தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021-ன் கீழ் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சலுகைகளை டெலிகிராம் இழக்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனை செயல்படுத்த 15 நாட்கள் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சில கல்வி மற்றும் தேர்வு தொடர்பான விவகாரங்களிலும் டெலிகிராம் மீது சர்ச்சைகள் எழுந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் கடுமையான அரசியல் மற்றும் நிர்வாக அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை இந்தியாவின் படைப்புத் துறையை பாதுகாக்கும் முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரே நாடு! ஒரே GST! மத்திய அரசு முடிவு..!! ஒரே வரி! ஒரே சந்தை! முக்கிய சீர்திருத்தம்..!!