நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாகும் ரேஷன் விநியோகம்!! ரூ.25,630 கோடி ஒதுக்கீடு! மத்திய அரசு அதிரடி!
நாடு முழுதும், ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தை முற்றிலும், 'டிஜிட்டல்' மயமாக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ரேஷன் பொருட்கள் வினியோகத்தை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கும் முக்கிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்கள் தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இத்திட்டத்துக்கு 25,630 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
‘சார்தக் பி.டி.எஸ்.’ (Sarath PDS) எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டம், தற்போதைய ரேஷன் வினியோக முறையில் எந்த மாற்றமும் இன்றி, அதன் பின்னணி செயல்பாடுகளான போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் பொருட்கள் கையாளுதலை நவீனப்படுத்தும். இதன் மூலம் வினியோகத் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 16-வது நிதிக்குழு பரிந்துரைப்படி இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
மத்திய தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களை விளக்கினார். இந்த சீர்திருத்தம் திறன், வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் பங்களிப்பை அதிகரிக்கும் வகையில் மூன்று முக்கிய தூண்களின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நீதிமன்ற அதிகாரியை காக்க வைத்ததால் வினை! நாள்முழுவதும் கோர்ட்டில் காத்திருந்த ஐபிஎஸ் அருண்! பரபரப்பு பின்னணி!
முதலாவது ‘நிர்மல்’ (Nirmal). செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் நிகழ்நேர பயனாளர் பதிவேடு இது. மத்திய துறைகளுடன் இணைக்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மட்டும் நலத்திட்ட உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்யும்.
இரண்டாவது ‘ஆஷா’ (Asha). பன்மொழிகளில் செயல்படும் AI அடிப்படையிலான குறைதீர்ப்பு மற்றும் தொடர்பு தளம். வாட்ஸாப்புடன் இணைக்கப்பட்ட இந்தத் தளம் நாளொன்றுக்கு மூன்று லட்சம் புகார்களை கையாளும் திறன் கொண்டது.
மூன்றாவது ‘சாக்ஷம்’ (Saksham). வினியோக நிர்வாகத்தை மேம்படுத்தும் AI தளம். ரேஷன் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை GPS மூலம் கண்காணித்தல், QR கோடு அடிப்படையிலான கண்காணிப்பு, தேவையை முன்கூட்டியே கணிக்கும் தொழில்நுட்பம் ஆகியவை இதில் அடங்கும்.
இத்திட்டத்தால் உணவு தானியப் போக்குவரத்து தூரம் 15 முதல் 50 சதவீதம் வரை குறையும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இதனால் போக்குவரத்து செலவும் கணிசமாகக் குறையும். AI, மெஷின் லேர்னிங், பிளாக்செயின் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் 81.35 கோடி பயனாளிகளுக்கு சிறந்த உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் இந்தத் திட்டம், ரேஷன் முறையை மிகவும் திறமையானதாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநில அரசுகளும் இதன் மூலம் துல்லியமான வினியோக ஏற்பாடுகளைச் செய்ய முடியும்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் மரபுக்கும் - விஜய் மரபுக்கும் இடையே யுத்தம்!! எடப்பாடி பழனிசாமியை பலவீனமாக்கி வெல்ல திட்டம்? இன்பத்துரை சாடல்!