எப்படி கிரிமினல் வழக்காச்சு? எதையும் சரியாக விசாரிக்கல… சென்னை உயர்நீதிமன்றத்திற்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்…!
கரூர் சம்பவம் தொடர்பான விசாரணையில் அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
கரூர் நகரின் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் பெரும் கூட்டத்தை ஈர்த்தது. ஆனால், இந்த ஆர்வமே துயரத்தின் விதையாக மாறியது. விஜய் மேடையில் பேசத் தொடங்கியதும், கூட்ட நெரிசல் கட்டுக்கடங்காமல் வெடித்தது. விஜயின் சுற்றுப் பயணத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க தனிநபர் ஆணையத்தை அமைத்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து ஐ.ஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டன. கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அப்போது, மனுதாரர்களுக்கு தெரியாமலேயே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை என இரு மனதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், எஸ்.ஐ.டி- க்கு உத்தரவிட்டது எப்படி என உயர் நீதிமன்றத்திடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது.
கரூர் வழக்கை தனி நீதிபதி, இரு நீதிபதிகள் விசாரித்தது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்சநீதிமன்றம் அறிக்கை கேட்டுள்ளது. ஒரு நபர் ஆணையத்தை முதலமைச்சர் அமைத்து உத்தரவிட்ட நிலையில், அதனை மீறுவதா என்றும் எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி சிறப்பு புலனாய்வு குழுவுக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதையும் படிங்க: மிரட்டலுக்கு அடிபணிய முடியாது... ஐகோர்ட்டில் அதிரடி காட்டிய தமிழ்நாடு அரசு...!
மேலும், மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிகார வரம்பிற்கு உட்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்ற விசாரித்தது குறித்து உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கக் கோரிய வழக்கு எப்படி கிரிமினல் வழக்காக பட்டியலிடப்பட்டது என விளக்கம் தரக் கூறியும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு.. சென்னை ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு!